செய்திகள்
மாங்குரோவ் காடுகளில் கழிவுநீருடன் குப்பைகள் தேங்கி கிடப்பதை காணலாம்

குப்பை கொட்டும் இடமான மாங்குரோவ் காடுகள்- அரசு பராமரிக்குமா?

Published On 2021-10-21 02:47 GMT   |   Update On 2021-10-21 02:47 GMT
கடல் வளத்தை பாதுகாக்கும் மாங்குரோவ் காடுகள் குப்பை கொட்டும் இடமாக மாறியுள்ளதை தடுத்து முறையாக பராமரிக்க புதுவை அரசு நடவடிக்கை எடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
புதுச்சேரி:

புதுவை தேங்காய்த்திட்டு, உப்பனாறு, முருங்கப்பாக்கம், அரியாங்குப்பம் மற்றும் கடற்கரை பகுதிகளில் மாங்குரோவ் என அழைக்கப்படும் சதுப்பு நில தாவரங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.

கடல் அரிப்பையும், கடல் சீற்றத்தை தடுப்பதில் மாங்குரோவ் காடுகள் முக்கிய பங்காற்றி வருகிறது. உதாரணமாக கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட சுனாமி பேரலையின்போது புதுவை நகரப்பகுதியில் பெரும் சேதம் ஏற்படாமல் இந்த மாங்குரோவ் காடுகள் தடுப்பு அரண் ஆக இருந்தது.

இதுதவிர வெளிமாநிலங்களில் இருந்து பல்வேறு வகையான பறவைகள் இனப் பெருக்கத்துக்காக மாங்குரோவ் காடுகளுக்கு வந்து தங்கி விட்டுச் செல்கின்றன. சிறு நீர்வாழ் விலங்குகளின் வாழ்விடமாகவும் மாங்குரோவ் காடுகள் உள்ளன. இங்குள்ள தட்பவெப்ப சூழ்நிலை பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் ஏற்றதாக இருந்து வருவதே இதற்கு காரணம். புதுச்சேரியின் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாப்பதிலும் மாங்குரோவ் காடுகள் முக்கியமானதாக விளங்குகின்றன.

இத்தனை சிறப்புமிக்க மாங்குரோவ் காடுகள் தற்போது அழிவை நோக்கி செல்கின்றன. அதாவது சிலர் மாங்ரோவ் காடுகளின் உள்ள மரங்களின் கிளைகளை வெட்டி கற்களில் கட்டி கடலுக்குள் மூழ்கடித்து விடுகின்றனர். இதனால் இயற்கையாகவே கடலுக்குள் மரம் இருப்பதுபோல் காணப்படுவதால் அதை சுற்றி மீன்கள் அதிக அளவில் படையெடுக்கின்றன.

அதை பயன்படுத்தி வலைகளை வீசியும், தூண்டில் போட்டும் எளிதாக மீன்களை பிடிப்பதாக கூறப்படுகிறது. இதற்காக மரங்கள் அதிக அளவில் வெட்டப்படுவதாக தெரியவந்துள்ளது.

மாங்குரோவ் மரங்களை வெட்டி புழுக்களை பிடித்து இறால் பண்ணைக்கு பயன்படுத்தி வந்தனர். இதனால் பல இடங்களில் மரங்கள் அழியும் நிலையில் இருந்தது. இதை தடுக்க 2015-ம் ஆண்டு புதுவை வனத்துறை புழுக்கள் வேட்டைக்கு தடை விதித்தது. தற்போது வனத்துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் மாங்குரோவ் மரங்களை வெட்டி புழுக்கள் எடுக்கப்படுகிறது.

இதற்காக தேங்காய்த்திட்டு, உப்பனாறு பகுதிகளில் உள்ள மாங்குரோவ் காடுகள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. அப்பகுதிகளில் உள்ளவர்கள் வீடுகளில் சேரும் கழிவுகளை மாங்குரோவ் காடுகளில் நேரடியாக விடுகின்றனர். பிளாஸ்டிக் பொருட்கள், பழைய துணிகள், மதுபாட்டில்கள் மற்றும் மக்காத குப்பைகளும் இங்கு கொட்டப்படுகின்றன.

இயற்கைக்கு மாறாக இப்படி அதிக அளவில் குப்பைகள் தேங்குவதால் மரங்களுக்கு தேவையான தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு அவை பட்டுப்போய் காணப்படுகின்றன. அங்கு தேங்கி கிடக்கும் தண்ணீரும் மாசு அடைந்து துர்நாற்றம் வீசுகிறது. கடல் வளம், நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் மாங்குரோவ் எனப்படும் சதுப்புநில காடுகளை பாதுகாப்பதில் இனியாவது விழித்தெழுந்து முறையாக பராமரிக்க புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.
Tags:    

Similar News