ஆன்மிகம்
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா 21-ந் தேதி தொடங்குகிறது

Published On 2020-08-18 05:04 GMT   |   Update On 2020-08-18 05:04 GMT
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா வருகிற 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமை பதி உள்ளது. இங்கு வைகாசி, ஆவணி மற்றும் தை மாதத்தில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் ஆவணி திருவிழா வருகிற 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொரோனா பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் குறைந்த அளவு பக்தர்கள் கொடியேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். அரசின் வழிகாட்டுதலின்படி எளிய முறையில் திருவிழா நடத்தப்படும்.

கொடியேற்ற தினத்தன்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிட்டு திரு நடைதிறத்தலும் தொடர்ந்து அய்யாவுக்கு பணிவிடையும், 5 மணிக்கு கொடி பட்டம் தயாரிக்கும் நிகழ்ச்சியும், தொடர்ந்து திருக்கொடியேற்றமும் நடைபெறுகிறது. பாலபிரஜாபதி அடிகளார் கொடியை ஏற்றி வைக்கிறார்.

தொடர்ந்து பக்தர்களுக்கு இனிமம் வழங்கப்படுகின்றன. பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதானமும், மாலை 6 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும், 28-ம் தேதி எட்டாம் திருவிழாவும் நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் காலை, மாலை பணிவிடையும், மதியம் உச்சி படிப்பு, இரவு அன்னதானமும் நடைபெறுகிறது. தலைமைப்பதியின் உள்பகுதியில் நடைபெறும் அனைத்து வழிபாடுகளும் சமூக இடைவெளியுடன் குறைவான பக்தர்கள் முன்னிலையில் நடைபெறும்.
Tags:    

Similar News