செய்திகள்
பூதலூர் அருகே கோட்டரப்பட்டி சலிப்பிரி ஏரி வறண்டு கிடக்கும் காட்சி

பூதலூர் அருகே கோட்டரப்பட்டியில் பாலைவனமான ஏரிகள்- விவசாயிகள் கவலை

Published On 2020-10-17 07:12 GMT   |   Update On 2020-10-17 07:12 GMT
பூதலூர் அருகே கோட்டரப்பட்டியில் தண்ணீர் இல்லாமல் ஏரிகள் பாலைவனமாக காட்சி அளிக்கின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
திருக்காட்டுப்பள்ளி:

தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியத்தில் செங்கிப்பட்டி பகுதியில் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் மற்றும் உய்யகொண்டான் நீட்டிப்பு கால்வாய்கள் மூலம் பாசனம் பெற்று ஒரு போக நெல் சாகுபடி மேற்கொள்ளப்படும். இந்த இரண்டு கால்வாய்களிலும் தண்ணீர் திறக்கப்பட்டு ஒரு மாதத்துக்கு மேலாகியும் பூதலூர் ஒன்றியத்தில் பல ஏரிகளுக்கு தண்ணீர் வராத நிலை உள்ளது. நீர் மேலாண்மை ஒழுங்கு முறைக்கு மாறாக கடைமடை பகுதியில் இருந்து நீர் நிரப்புவதற்கு பதிலாக இந்த பாசன பகுதியில் அவரவர் விருப்பப்படி தண்ணீரை ஏரிகளுக்கு நிரப்பிக் கொண்டுள்ளனர். உய்யகொண்டான் நீட்டிப்பு கால்வாய் மூலம் பாசனம் பெறும் ஏரிகளில் கடைமடை பகுதியாக உள்ள கோட்டரப்பட்டி பகுதியிலுள்ள சலிப்பிரி, வேலான்மாதுரான் ஏரிகளில் ஒரு சொட்டு கூட தண்ணீர் இல்லை. இதனால் இந்த ஏரிகள் பாலைவனமாக காட்சி அளிக்கின்றன.

இதைப்போல அழகாபேட்டை, சேராம்பாடி, சாயல்குடி, கடையகுடி அய்யனார்குருக்கள் ஏரிகளிலும் தண்ணீர் முற்றிலும் இல்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் பாசனம் பெறும் ஏரிகளில் கடைமடை பகுதியாக உள்ள செல்லப்பன் பேட்டையில் உள்ள ஒரு ஏரி வறண்டு கிடக்கிறது. எனவே பொதுப்பணித்துறை ஆற்றுப்பாதுகாப்பு கோட்ட அதிகாரிகள் புதிய கட்டளை மேட்டு கால்வாய் மற்றும் உய்யகொண்டான் நீட்டிப்பு கால்வாய்களில் தண்ணீரை நிரப்பி தர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கடைமடை பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News