தொழில்நுட்பம்

எங்க பக்கம் பெரிய டீம் இருக்கு - டிக்டாக் தடை தற்காலிகமானது என நம்புகிறோம்

Published On 2019-04-20 10:37 GMT   |   Update On 2019-04-20 10:37 GMT
இந்தியாவில் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டிருப்பது தற்காலிக நடவடிக்கை என நம்புவதாக அந்நிறுவன அதிகாரி தெரிவித்தார். #TikTok



இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை தொடர்ந்து டிக்டாக் செயலி கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர்களில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டு விட்டது. டிக்டாக் செயலியில் ஆபாச வீடியோக்கள் அதிகளவு பரவுவதால் சிறுவர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

சீனாவை சேர்ந்த பைட் டேன்ஸ் நிறுவனத்தின் டிக்டாக் செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், உலகம் முழுக்க சுமார் 150 சந்தைகளில் சுமார் 75 மொழிகளில் டிக்டாக் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் டிக்டாக் செயலிக்கான தடை எந்த வகையிலும் பலன் தராது என்ற வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர்.

டிக்டாக் மீதான தடை இடைக்கால நடவடிக்கை என நினைக்கிறேன். அரசாங்கத்திடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கும் என நம்புகிறோம் என டிக்டாக் இந்தியாவின் மூத்த அதிகாரி சுமேதாஸ் ராஜ்கோபால் தெரிவித்தார். இத்துடன் செயலி தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது. டிக்டாக் சமூகம் தொடர்ந்து இயங்கி வருகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.



சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை டிக்டாக் செயலிக்கு விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறது குறி்ப்பிடத்தக்கது.

செயலியில் பரவும் தரவுகளை ஆய்வு செய்யும் குழுவினரின் எண்ணிக்கை கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சுமார் 400 சதவிகிதம் அதிகரித்துள்ளது என ராஜ்கோபால் தெரிவித்தார். தங்களது குழுவினர் தரவுகளை நீ்க்கி வருவதாகவும், கடந்த வாரம் மட்டும் விதிகளை மீறியதாக சுமார் 60 லட்சம் வீடியோக்கள் நீக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

டிக்டாக் செயலி குழந்தைகளிடம் ஆபாசத்தை கொண்டு சேர்க்கலாம் என்ற அச்சம் அதிகரித்துள்ள நிலையில், செயலியை பல்வேறு கலைஞர்கள் பயன்படுத்த துவங்கியிருப்பதாக ராஜ்கோபால் தெரிவித்தார். 

பல்வேறு பிரபலங்கள் டிக்டாக் பயன்படுத்துவோரின் திறமையை பார்த்து, அவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதாக அவர் தெரிவித்தார். டிக்டாக் செயலி அனைவருக்கும் பாதுகாப்பான ஒன்றாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார். 
Tags:    

Similar News