செய்திகள்
புழல் ஏரி

குடிநீர் ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு

Published On 2019-10-17 06:50 GMT   |   Update On 2019-10-17 06:50 GMT
நீர்வரத்து அதிகரித்ததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 முக்கிய ஏரிகளின் நீர்மட்டம் தற்போது ஒன்றரை டி.எம்.சி. அளவுக்கு உயர்ந்துள்ளது.
சென்னை:

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் கடந்த மாதம் வரை வறண்ட நிலையில் காணப்பட்டது.

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் சென்னை மற்றும் புறநகரில் கடந்த 1 வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளுக்கு தற்போது தண்ணீர் வரத்தொடங்கி உள்ளது.

கிருஷ்ணா நீர்வரத்து காரணமாக 3231 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 1111 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது.

கிருஷ்ணா தண்ணீருடன் மழை நீர் சேர்ந்து வருவதால் ஏரிக்கு தற்போது 1233 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

புழல் ஏரிக்கு 600 கனஅடி தண்ணீர் வருவதால் ஏரியில் 160 மில்லியன் கனஅடி தண்ணீர் சேர்ந்துள்ளது. சோழவரம் ஏரிக்கு 46 கன அடி தண்ணீரும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு 60 கனஅடி தண்ணீரும் வருவதால் ஏரியின் நீர்மட்டம் உயரத் தொடங்கி உள்ளது.

இது தவிர வீராணம் ஏரிக்கும் 500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 முக்கிய ஏரிகளின் நீர் மட்டம் தற்போது 1½ டி.எம்.சி. அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு நிலவிய சென்னைக்கு தட்டுப்பாடின்றி தண்ணீர் வழங்க குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது. இது பற்றி உயர் அதிகாரி கூறியதாவது:-

சென்னைக்கு தினமும் 845 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. கோடை காலத்தில் ஏரிகள் வறண்டதால் 550 மில்லியன் லிட்டராக குடிநீர் வினியோகம் குறைந்தது.

ஒரு நாள் விட்டு ஒரு நாள் வீடுகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. லாரி தண்ணீரும் வினியோகம் செய்து வந்தோம். தற்போது ஏரிகளுக்கு மழைநீர் வந்து கொண்டிருப்பதுடன் கிருஷ்ணா தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

இதனால் வீடுகளுக்கு குழாய்களில் கிடைத்து வந்த தண்ணீரை அதிகரித்து வழங்க வாரியம் முடிவு செய்துள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் இதற்கான அறிவிப்பை வெளியிடுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News