ஆன்மிகம்
கந்தசஷ்டி விழாவையொட்டி புதுவண்டிப்பாளையம் சுப்பிரமணியசாமி கோவிலில் சூரசம்ஹாரம் நடைபெற்ற காட்சி.

கடலூர் சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா: திரளான பக்தர்கள் தரிசனம்

Published On 2020-11-21 05:41 GMT   |   Update On 2020-11-21 05:41 GMT
கடலூர் புதுவண்டிப்பாளையம் சிவசுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கடலூர் புதுவண்டிப்பாளையம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி முருகனுக்கு சிறப்பு பூஜை, ஆராதனை நடந்தது. தொடர்ந்து இடும்பன், காமதேனு, பல்லக்கு, ரிஷபம், விமானம், நாக வாகனங்களில் சாமி வீதி உலா வந்தது. நேற்று முன்தினம் பல்லக்கில் வீதி உலா, வீரபாகு சிறை மீட்டல், தாரகன்வதம், சக்திவேல் பெறும் விழா, ரிஷப வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது.

நேற்று காலை 6 மணிக்கு மகா அபிஷேகம் நடந்தது. இதில் பால், தயிர், இளநீர் போன்ற பல்வேறு வகையான பொருட்களால் சாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு மாலை 7 மணிக்கு வீரபாகுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, வீரபாகு தூது, சிங்கமுகன் வதம், கம்பத்து பாடலுடன் சூரசம்ஹாரம் நடந்தது.

விழாவில் வண்டிப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் முக கவசம் அணிந்து பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. விழாவையொட்டி இன்று (சனிக்கிழமை) திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

கடலூர் புதுப்பாளையம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹார விழா நடைபெற வில்லை. இருப்பினும் காலையில் சிறப்பு பூஜையும், மாலையில் சந்தனகாப்பு அலங்காரமும் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டியை முன்னிட்டு நேற்று காலை 10.30 மணிக்கு கலச பூஜை நடந்தது. பின்னர் கோவிலில் உள்ள முருகனுக்கு 24 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மூலமந்திர ஹோமம் நடந்ததும், கோவில் உட்பிரகாரத்தில் கலச புறப்பாடு நடந்தது. இதையடுத்து முருகனுக்கு வெள்ளி கவச அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள முருகன் கோவில்களிலும் கந்தசஷ்டியை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜை நடந்தது.
Tags:    

Similar News