செய்திகள்
தொடர் மழை காரணமாக மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

தொடர் மழை காரணமாக மூல வைகை ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு

Published On 2021-04-16 09:08 GMT   |   Update On 2021-04-16 09:08 GMT
தேனி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மூல வைகை ஆற்றில் 35 ஆண்டுகளுக்கு பிறகு சித்திரை மாதத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வருசநாடு:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. சித்திரை மாதத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயிலுக்கு இந்த மழையினால் இதமாக காட்சியளிக்கிறது.

முல்லைப் பெரியாறு அணையில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அணையின் நீர் மட்டம் 126.35 அடியாக உள்ளது. நேற்று 100 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று 225 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 3910 மில்லியன் கன அடியாக உள்ளது. மஞ்சளாறு அணை நீர் மட்டம் 42.60 அடியாக உள்ளது. சோத்துப்பாறை நீர் மட்டம் 115.78 அடியாக உள்ளது. வரத்து 49 கன அடி. திறப்பு 3 கன அடி. இதே போல் வைகை அணை நீர் மட்டம் 63.48 அடியாக உள்ளது. வரத்து 40 கன அடியாகவும், திறப்பு 72 கன அடியாகவும் இருப்பு 4303 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.

வெள்ளிமலை வனப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக நேற்று மூல வைகை ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது. வாய்ப்பு உள்ளது. இதற்கிடையே வெயில் காலத்தில் மூலவைகை ஆற்றில் நீர்வரத்து உயர்ந்திருப்பது கடமலைமயிலை ஒன்றிய பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விவசாயிகள் கூறுகையில், பொதுவாக சித்திரை மாதம் அதிக வெயில் காரணமாக மூலவைகை ஆறு வறண்டு நிலையில் காணப்படும். ஆனால் 35 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது சித்திரை மாதம் மூலவைகை ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் 18 ஊராட்சிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்கப்படும். மேலும் விவசாயம் அதிக அளவில் செய்ய முடியும் என்றனர்.

பெரியாறு 2.8, தேக்கடி 9, கூடலூர் 31.8, சண்முகாநதி அணை 4.7, உத்தமபாளையம் 10.1, வீரபாண்டி 2.8, வைகை அணை 4, சோத்துப்பாறை 4, கொடைக்கானல் 4.6 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. 

Tags:    

Similar News