செய்திகள்
கோப்புபடம்.

கல்விக்கடன் கிடைக்காமல் தவிக்கும் மாணவர்கள் - பல முறை விண்ணப்பித்தும் அலைக்கழிக்கும் வங்கிகள்

Published On 2021-09-28 08:30 GMT   |   Update On 2021-09-28 10:38 GMT
படிப்பதற்கு பணமில்லாமல் மாணவர்கள் படிக்க முடியாத நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக கல்வி கடன் திட்டத்தை அரசுகள் செயல்படுத்தின.
திருப்பூர்:

ஒரு காலத்தில் என்ஜினீயரிங், மருத்துவம் உள்ளிட்ட உயர் கல்வி படிப்புகள் ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்து வந்தது. இதனால் என்ஜினீயர், டாக்டர் ஆக வேண்டும் என்று நினைத்த மாணவர்களின் கனவு கலைந்து போனது.  

படிக்க வசதியில்லாததால் வேறு படிப்புகளை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டிய நிலைமை இருந்தது. என்ஜினீயரிங், மருத்துவம் உள்ளிட்ட படிப்புகள் எல்லாம் பணக்காரர்கள் மட்டும் படிக்கும் படிப்பாகவே இருந்து வந்தது.

நுழைவு தேர்வில் வெற்றி பெற்றாலும் கூட படிக்க பணம் இல்லாததால் பல ஏழை மாணவர்கள் மருத்துவ படிப்பை துறந்த சம்பவங்களும் உண்டு. 

ஆனால் நாட்கள் செல்ல செல்ல இந்த நிலைமை மாற தொடங்கியது. நகரம் முதற்கொண்டு கிராமத்தில் உள்ள ஏழை மாணவர்களும் என்ஜினீயரிங், மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளை படிப்பதற்கான வசதிகளை செய்து கொடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் மேற்கொண்டன.

படிப்பதற்கு பணமில்லாமல் மாணவர்கள் படிக்க முடியாத நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக கல்வி கடன் திட்டத்தை அரசுகள் செயல்படுத்தின. 

இது ஏழை மாணவர்களுக்கு மிகவும் வரப்பிரசாதமாக அமைந்தது. இதன் மூலம் சாதாரண கூலி தொழிலாளியின் குழந்தைகள் கூட என்ஜினீயரிங், மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் சேர்ந்து படித்து வருகின்றனர்.

கல்வி கடனை பெற்றுக்கொண்ட மாணவர்கள் தாங்கள் படித்து முடித்ததும் வேலைக்கு சென்று கடனை திருப்பி செலுத்துவதற்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. 

இந்த திட்டத்தின் மூலம் ஏராளமான மாணவர்கள் படிப்பு முடிந்து வேலைக்கு சென்று கல்வி கடனை திருப்பி செலுத்தி வருகின்றனர். ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் மட்டுமே என்ஜினீயரிங், மருத்துவம் படிப்பவர்களின் எண்ணிக்கை இருந்த நிலையில் இன்று  நாடு முழுவதும் சாமானியர்களின் குழந்தைகளும் உயர் படிப்புகளை படித்து வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்து வருகின்றனர். 

கல்வி கடன் பெற்று படித்த மாணவர்கள் பலர் இன்று மிகப்பெரிய டாக்டர்கள்,விஞ்ஞானிகள், பொறியாளராக உள்ளனர். கல்வி கடன் திட்டம்  இல்லையென்றால் அவர்களால் இந்த நிலைமைக்கு வந்திருக்கவே முடியாது.

ஏதோ ஒரு பட்டப்படிப்போ, பாலிடெக்னிக்கோ படித்து அரசு வேலை அல்லது தனியார் வேலையில் சேர்ந்து வாழ்க்கையை ஓட்டி கொண்டிருந்து இருப்பார்கள்.  

ஆனால் இன்று அவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் கல்வி கடன் திட்டமே காரணமாகும். எனவே ஏழை-பணக்காரர்கள் என்றில்லாமல் மாணவர்கள் அனைவருக்கும் கல்வி கடன் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதேப்போல் மாநில அரசுகளும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. சில மாநிலங்கள் மாணவர்களின் கல்வி கடனை தள்ளுபடி செய்வதாக கூட அறிவித்துள்ளன. இது மாணவர்களுக்கு மேலும் ஊக்கத்தை அளித்துள்ளது.
  . 
படிப்பில் ஆர்வம் இல்லாத மாணவர்களை கூட உயர்கல்வி பக்கம் திரும்ப வைத்துள்ளது. இதனால் நாளுக்குள் நாள் என்ஜினீயரிங், மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளை படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

ஆனால் எந்த திட்டமாக இருந்தாலும் ஏதாவது ஒரு வகையில் குறைபாடு உள்ளே புகுந்து விடும். அந்த வகையில் தற்போது உயர் கல்வி படிப்புக்கு கல்விகடன் அளித்தாலும் அதனை பெறுவதில் மாணவர்கள் படும்பாடுதான்  கவலை அளிப்பதாக உள்ளது.

எந்த கடனாக இருந்தாலும் அதனை வாங்குவதற்கு வங்கிக்கு சென்றால் காலையில் இருந்து மாலை வரை நின்றாலும் கூட பலரால் பெற முடியாத நிலை உள்ளது. அதேப்போல் கல்வி கடன் பெறுவதில் மாணவர்கள் பல்வேறு சிக்கல்களை சந்தித்தே பெற வேண்டியது உள்ளது.

பல மாணவர்கள் வங்கிக்கு கால் கடுக்க அலைந்து திரிந்தும் கூட இன்னும் பெற முடியாத நிலையிலேயே உள்ளனர். அந்த அளவுக்கு வங்கி நிர்வாகங்கள் செயல்படுவது பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சில மாணவர்கள் கல்விகடனே வேண்டாம் என்று கிடைக்கிற படிப்பில் சேர்ந்து படித்து வருகின்றனர். 

திருப்பூர் மாவட்டத்தில் ஏராளமான மாணவர்கள் கல்வி கடன் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். பல்லடம் அருகே கரைப்புதூர் ஊராட்சிபொன்நகர்  பகுதியை சேர்ந்த மாணவர் கவுசிக் (18) கூறுகையில், 

கோவை தனியார் கல்லூரியில் பி.டெக்., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். எங்களது குடும்பம் வறுமையில் உள்ளதால் கல்வி கற்பதற்குபோதுமான நிதி வசதி இல்லை. 

இதனால் கல்விக்கடன் கேட்டு கடந்த 2 ஆண்டுகளாக வங்கியில் விண்ணப்பித்து  வருகிறேன். ஆனால் இதுவரை 3 மேலாளர்கள் மாறி விட்டனர். 3 பேரிடமும் விண்ணப்பித்தேன். இதுவரை கல்வி கடன் கிடைக்கவில்லை என்றார்.

மற்றொரு மாணவர் கார்த்திக்கேயன் கூறுகையில், 

ஒரு வருடமாக கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்து வருகிறேன். கடன் தர மறுக்கின்றனர். அதற்கான காரணங்கள் கேட்டாலும் பதில் தர மறுக்கின்றனர். வறுமையில் இருப்பதால் கல்வி கற்பதற்கு வேறுவழி இல்லாமல் தவிக்கிறோம் என்றார்.

கல்வியாளர்கள் கூறுகையில், உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் படிப்பு முடிந்ததும் நல்ல சம்பளத்தில் வேலைக்கு செல்வார்கள். இதன்மூலம் அவர்களால் எளிதாக கடனை அடைத்து விட முடியும். எனவே வங்கி நிர்வாகங்கள் கல்வி கடன் கொடுக்க முன்வர வேண்டும்.  

தற்போதைய கொரோனா காலக்கட்டத்தில் பல மாணவர்களின் பெற்றோர்கள் மிகவும் வறுமையில்  உள்ளனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் அவர்களுக்கு கல்வி கடன் ஒன்றே மிகவும் உறுதுணையாக இருக்கும். இல்லையென்றால் இடையில் படிப்பை நிறுத்தி விட வாய்ப்புள்ளது. 

இதன்மூலம் சிறந்த தொழில் நுட்ப, மருத்துவ மாணவர்களை பெற முடியாத நிலை ஏற்பட்டு விடும். எனவே இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் மாணவர்கள் வாங்கிய கல்விக்கடனை தள்ளுபடி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.   
Tags:    

Similar News