செய்திகள்
உடைக்கப்பட்ட உண்டியல்

விருதுநகரில் சொக்கநாதர் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து கொள்ளை

Published On 2021-07-18 08:44 GMT   |   Update On 2021-07-18 08:44 GMT
விருதுநகரில் சொக்கநாதர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது உண்டு. நேற்று இரவு வழக்கம்போல் பூஜைகள் முடிந்ததும் பணியாளர்கள் கோவிலை பூட்டி சென்றனர்.

விருதுநகர்:

விருதுநகர் மையப்பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ சொக்கநாதர் கோவில். இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோவிலின் நிர்வாக அதிகாரியாக தேவி செயல்பட்டு வருகிறார்.

தினமும் இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது உண்டு. நேற்று இரவு வழக்கம்போல் பூஜைகள் முடிந்ததும் பணியாளர்கள் கோவிலை பூட்டி சென்றனர்.

இந்த நிலையில் இன்று காலை கோவிலில் வழிபாடு நடத்த அர்ச்சகர் வந்தார். அவர் கோவிலின் முன்பக்க கதவு பூட்டை திறந்து உள்ளே சென்றார். அப்போது அங்கு உள்ள சி.சி.டி.வி. கேமரா சேதப்படுத்தப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தொடர்ந்து கோவிலுக்குள் சுற்றிப் பார்த்த போது பிரகாரத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதியில் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பயணம் கொள்ளை போனது தெரிய வந்தது. ஆனால் கொள்ளை போன நகைகள், பணத்தின் மதிப்பு தெரியவில்லை.

இதுகுறித்து பஜார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

யாரோ மர்ம மனிதர்கள் நள்ளிரவு நேரம் கோவில் பூட்டை உடைக்காமல் காம்பவுண்டு சுவரை தாண்டி உள்ளே குதித்து வந்துள்ளனர். அவர்கள் சி.சி.டி.வி. கேமராவை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.

அதன் பிறகு தட்சிணா மூர்த்தி சன்னதி முன்பு இருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

நகரின் மைய பகுதியில் உள்ள கோவிலில் மர்ம மனிதர்கள் இரவில் புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கோவிலில் இரவு காவலர் பணியில் உள்ளார். ஆனால் அவருக்கு கொள்ளை குறித்து எந்த தகவலும் தெரியவில்லை.

இது தொடர்பாக விருதுநகர் பஜார் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். கோவிலுக்குள் புகுந்த கொள்ளையர்கள் தட்சிணாமூர்த்தி சன்னதி உண்டியலை மட்டும் உடைத்து பணம்- நகை எடுத்துச் சென்றுள்ளனர்.

மூல தெய்வமான சொக்கநாதர் சன்னதி உண்டியலில் அவர்கள் கைவைக்கவில்லை. இதற்கு காரணம் என்ன என்பது மர்மமாக உள்ளது.

சிவன் உண்டியலை தொடுவதற்குள் ஏதாவது சத்தம் கேட்டு அவர்கள் வெளியேறி விட்டார்களா?அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் விருதுநகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

Similar News