செய்திகள்
பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி

‘மோசமான நிலையில் பொருளாதாரம்’ - சுப்பிரமணியசாமி சொல்கிறார்

Published On 2020-01-11 20:08 GMT   |   Update On 2020-01-11 20:08 GMT
பொருளாதாரத்தை மேம்படுத்த வருமான வரியை ஒழிக்க வேண்டும் என பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்.பி.யுமான சுப்பிரமணியசாமி தெரிவித்தார்.
ஆமதாபாத்:

பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்.பி.யுமான சுப்பிரமணியசாமி நேற்று குஜராத் சிந்து பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘இந்திய பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது. எல்லாம் கீழ்நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதேநிலை நீடித்தால் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மூடப்படும். இது பேரழிவை ஏற்படுத்தும். தேவை குறைபாடே தற்போதைய நிலைக்கு காரணம். நம்மிடம் வினியோகம் இருக்கிறது. ஆனால் நுகர்வு இல்லை. எனவே வாங்கும் திறனை அதிகரிக்க ரூபாய் நோட்டுகளை அச்சடித்து மக்களிடம் அரசு வழங்க வேண்டும். 6 வழி, 8 வழி சாலைகளை அரசு அமைக்க வேண்டும்’ என்று கூறினார்.

பொருளாதாரத்தை மேம்படுத்த என்ன நடவடிக்கை எல்லாம் எடுக்க முடியுமோ? அவை அனைத்தையும் மேற்கொள்ள வேண்டும் எனக்கூறிய சுப்பிரமணியசாமி, வருமான வரியை ஒழிக்க வேண்டும் என கூறினார். நாட்டின் வரி பயங்கரவாதத்தை நிறுத்த வேண்டும் எனவும், இதுவே முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News