ஆன்மிகம்
மீனாட்சி அம்மன்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி திருவிழா 15-ந் தேதி தொடக்கம்

Published On 2020-08-12 09:56 GMT   |   Update On 2020-08-12 09:56 GMT
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூல திருவிழா வருகிற 15-ந் தேதி (சனிக்கிழமை) தொடங்குகிறது. இந்த திருவிழாவில் தரிசிக்க அனுமதி வழங்கினால், மற்ற பெரிய கோவில்களிலும் தரிசனத்துக்கு அனுமதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் பக்தர்கள் உள்ளனர்.
மதுரை :

கொரோனா பரவலை தடுக்க எடுத்த நடவடிக்கைகளில் ஒன்றான ஊரடங்கு, கடந்த மார்ச் மாதம் கடைசியில் இருந்து தற்போது வரை அமலில் இருந்து வருகிறது. கோவிலில் தரிசனமும் விழாக்களும் ரத்து செய்யப்பட்டன.

கடந்த ஏப்ரல் மாதத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழா ரத்தானதும், அதன்தொடர்ச்சியாக பல பெரிய கோவில்களில் விழாக்கள் ரத்து செய்யப்பட்டன. மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாணம் மட்டும் கோவிலின் உள்ளேயே மிக எளிமையாக நடத்தப்பட்டது.

இறைவன் மதுரை சித்திரை திருவிழாவை நிறுத்தி ஏதோ திருவிளையாடல் நடத்துகிறான் என மதுரை பக்தர்கள் அப்போது கூறினர். ஆனால் இடையில் கொரோனா தாண்டவமும், அதனால் ஏற்பட்ட பல விளைவுகளும், இன்னல்களும் மக்களுக்கு பல பாடங்களை சொல்லிக் கொடுத்தன. இனியும் இது தொடர வேண்டாம் என இறைவனை வேண்டுகின்றனர். எனவே சித்திரையில் நின்று போனது, ஆவணியில் கைகூடும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

மதுரையில் கொரோனா தாக்கம் குறைந்து சிறிய கோவில்களில் தரிசனம் தொடங்கிவிட்டது. ஆவணி மூல திருவிழா தொடங்குவதற்கான நாளும் வந்துவிட்டது. எனவே மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனமும், விழாவும் தொடங்கிவிட்டால் அதையே முன்மாதிரியாக கொண்டு மீண்டும் தமிழகம் முழுவதும் கோவில்கள் திறக்கப்படுவதும், விழாக்கள் நடைபெறுவதும் தொடங்கிவிடும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களிலும் திருவிழா நடைபெற்றாலும், அதில் சித்திரை, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, தை, மாசி மாத விழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. அதில் சித்திரை திருவிழாவில் அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்து, 4 மாதங்கள் அம்மன் ஆட்சி புரிவதாக ஐதீகம்.

அதை தொடர்ந்து ஆவணி மூல திருவிழாவில் சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம் நடத்தப்பட்டு, அவர் 8 மாதங்கள் ஆட்சி புரிவார். அவ்வளவு சிறப்பு வாய்ந்த ஆவணி மூல திருவிழா வருகிற 15-ந் தேதி (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் 1-ந் தேதி தேதி வரை நடக்கிறது. 15-ந் தேதியில் இருந்து 20-ந் தேதி வரை சந்திரசேகரர் புறப்பாடு கோவிலுக்குள் சுவாமி சன்னதி 2-ம் பிரகாரத்தில் நடைபெறும்.

21-ந் தேதியில் இருந்து அடுத்த மாதம் 1-ந் தேதி வரை பெரிய திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவில்தான் சிவபெருமான் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களில் 10 திருவிளையாடல் லீலைகள் இடம்பெறும். அதில் 21-ந் தேதி கருங்குருவிக்கு உபதேசம் செய்தது, 22-ந் தேதி நாரைக்கு முக்தி கொடுத்தல், 23-ந் தேதி மாணிக்கம் விற்றது, 24-ந் தேதி தருமிக்கு பொற்கிழி அளித்தது, 25-ந் தேதி உலவாக்கோட்டை அருளியது, 26-ந் தேதி பாணனுக்காக அங்கம் வெட்டியது.

சுந்தரேசுவரர் பட்டாபிஷேகம்

விழாவில் சிறப்பு நிகழ்ச்சியான 27-ந் தேதி வளையல் விற்ற லீலை முடிந்த பின்னர் சுந்தரேசுவரர் பட்டாபிஷேகம் நடைபெறும்.

28-ந் தேதி நரியை பரியாக்கியது, 29-ந் தேதி பிட்டுக்கு மண் சுமந்தது, 30-ந் தேதி விறகு விற்றது என 10 திருவிளையாடல் லீலைகள் நடைபெறும். அதை தொடர்ந்து 31-ந் தேதி சட்டத்தேரோட்டமும், அடுத்த மாதம் 1-ந் தேதி தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறும்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த ஆவணி திருவிழாவில் சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மனுடன் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி ஆவணி மூல வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். ஆனால் கடந்த மாதம் நடைபெற்ற திருவிழாவில் சுவாமியை கோவிலை விட்டு வெளியே கொண்டு வராமல் கோவில் உள்ளேயே திருவிழா நடைபெற்றது.

இந்த நிலையில் ஆவணி மூலதிருவிழாவில் கொடியேற்றம் நடந்தால் கண்டிப்பாக லீலைகள் நடத்தி சுவாமியை வாகனத்தில் ஏற்றி ஆவணி வீதிகளை வலம் வர வேண்டும். இதுகுறித்து அரசு என்ன முடிவு எடுக்க போகிறது? என்று தெரியவில்லை. இருந்தாலும் கொரோனா தற்போது குறைந்து வருவதாலும், அரசு பல்வேறு தளர்வுகளை வழங்குவதால் திருவிழாவை வழக்கம் போல் நடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக பரவலாக பேசப்படுகிறது.

மற்ற கோவில்களில் ஆடி திருவிழாக்களை நடத்தியது போன்று மீனாட்சி அம்மன் கோவில் மூலதிருவிழாவை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.

ஆவணி மூலதிருவிழாவில் சுவாமி வலம் வரும் ஆவணி மூல வீதிகளில் பல்வேறு சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக வடக்கு ஆவணி மூலவீதியில் பழைய சென்டிரல் மார்க்கெட் அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பலஅடுக்கு வாகன காப்பகம் கட்டுமான பணி நடந்து வருகிறது. அதனால் அந்த வழியாக சுவாமி சுற்றி வரமுடியாத நிலை உள்ளது. எனவே மாநகராட்சி விரைந்து செயல்பட்டு அந்த வழியாக சுவாமி வலம் வருவதற்கான வழிகளை உடனே சீரமைத்து தர வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
Tags:    

Similar News