செய்திகள்
வெங்காயம்

வெங்காயம் விலை அதிகரிப்பால் பொதுமக்கள் தவிப்பு

Published On 2020-09-12 10:23 GMT   |   Update On 2020-09-12 10:23 GMT
வெளிமாநில வரத்து குறைந்ததால் ஒட்டன் சத்திரம் மார்க்கெட்டில் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது.
சத்திரப்பட்டி:

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் மிகப்பெரிய காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுப்புறத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்தும் மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இருந்தும் வெங்காயம் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது வெளி மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக வெங்காய வரத்து அடியோடு நின்றுள்ளது. அருகில் உள்ள கிராமங்களில் இருந்து மட்டுமே குறைந்த அளவு வெங்காயம் கொண்டு வரப்படுகிறது.

தற்போது நடவு சீசன் என்பதால் வெங்காயத்தை அதிக அளவு விவசாயிகள் விதைப்பு பணிக்காக வாங்கிச் செல்கின்றனர். கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை இது விற்பனையாகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ வெங்காயம் ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனையான நிலையில் தற்போது ரூ.50 வரை அதிகரித்துள்ளது. இதே போல் பல்லாரி வெங்காயமும் கிலோ ரூ.60 வரைவிற்கப்படுகிறது. வரத்து குறைவு காரணமாக இந்த விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுவாக மழை மற்றும் பனிக்காலங்களில் வெங்காயம் விலை அதிகரிக்கும். ஈரப்பதம் காரணமாக அழுகல் நோய் ஏற்படும் என்பதால் அதனை இருப்பு வைத்து வியாபாரிகள் விற்பார்கள். அது போன்ற சூழல் தற்போது நிலவுவதால் வெங்காயம் விலை அதிகரித்துள்ளதாகவும், அடுத்து வரும் நாட்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

விலை அதிகரிப்பை மனதில் வைத்து சிலர் வெங்காயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்யவும் வாய்ப்பு உள்ளதால் அதனை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்க எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Tags:    

Similar News