செய்திகள்
முக ஸ்டாலின்

ரூ.14 ஆயிரம் கோடிதான் வெளிநாட்டு முதலீடு வந்துள்ளது- மு.க.ஸ்டாலின் பேச்சு

Published On 2019-09-12 07:13 GMT   |   Update On 2019-09-12 07:13 GMT
ஜெயலலிதா ஆட்சியில் ரூ.14 ஆயிரம் கோடிதான் வெளிநாட்டு முதலீடு வந்துள்ளது என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
சென்னை:

சென்னை அண்ணா நகரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொழில் முதலீடுகளை பெறுவதற்காக வெளிநாடு சென்று வந்துள்ளதாக கூறுகிறார். ஏற்கனவே ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது முதல் உலக முதலீட்டாளர்களின் மாநாட்டை நடத்தினார். அதன் பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் ஆனதும் 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினார்.

இந்த 2 மாநாட்டின் மூலம் மொத்தம் எத்தனை கோடி ரூபாய் முதலீடு வந்துள்ளது? எத்தனை தொழிற்சாலை வந்துள்ளது? எவ்வளவு பேருக்கு வேலை கிடைத்துள்ளது? இதை வெள்ளை அறிக்கையாக வெளியிடுங்கள் என்று கேட்டால் வெள்ளை அறிக்கை கிடையாது. வெள்ளரிக்காய்தான் கிடைக்கும் என்று அமைச்சர்கள் சொல்கிறார்கள்.

அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், “தி.மு.க. ஆட்சியில் வெள்ளை அறிக்கை வெளியீட்டார்களா? என்று எதிர் கேள்வி கேட்கிறார்.

நாங்களும் வெளிநாடு போனோம். எங்கள் ஆட்சியில் முதல்-அமைச்சர் போகவில்லை. துணை முதல்-அமைச்சரான உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த நான் சென்று வந்தேன். முதலீட்டை பெறுவதற்காக போகவில்லை. நன்றாக கவனிக்க வேண்டும்.

இப்போது முதலீட்டை பெறுவதற்காக போகிறோம் என்று சொல்லி விட்டு நீங்கள் சென்று வந்தீர்கள்? ஆனால் நாங்கள் அதற்கு போகவில்லை.

இன்று சென்னையை சுற்றி கம்பீரமாக மெட்ரோ ரெயில் சுற்றி வருகிறதே அந்த ரெயில் திட்டத்துக்காக சில அதிகாரிகளை அழைத்துக் கொண்டு ஜப்பான் நாட்டுக்கு சென்று வந்தோம்.

நீங்கள் போவதைபோல் சுற்றுலா மாதிரி அமைச்சர்களுடன் போகவில்லை. அவர்கள் ஆட்சி முடிய இன்னும் 1½ வருடம் தான் இருக்கிறது. அதற்குள் எல்லா நாட்டுக்கும் போய் வந்துவிட வேண்டும் என்ற ஒரே முடிவோடு வெளிநாடு செல்கிறார்கள்.

வெளிநாட்டுக்கு செல்லும் போது சொந்த வேலையாக செல்கிறேன் என்று அறிவித்து விட்டு செல்லுங்கள். முதலீடுகளை பெற போகிறோம் என ஒரு நாடகத்தை நடத்திவிட்டு போகிறீர்களே? அதைத்தான் சுட்டி காட்டுகிறோம்.

நாங்கள் வெளிநாடு சென்றது ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டத்துக்காக, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்காக அதற்குரிய நிதியை பெற சென்று வந்தோம். அந்த நிதியை பெற்று வந்து இருக்கிறோம்.

தமிழகத்திற்கு எந்த அளவுக்கு முதலீட்டை பெற்று வந்தீர்கள்? என்பதற்காக தான் வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு தொடர்ந்து கூறி வருகிறோம்.



சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பில் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் ஒரு விளக்கம் கேட்டு இருந்தார்கள். அதாவது ஜெயலலிதா உயிரோடு இருந்த நேரத்தில் 2.42 லட்சம் கோடி ரூபாய் முதலீடு பெற்று லட்சக்கணக்கானோருக்கு வேலை கொடுப்போம் என்று அறிவித்து இருந்தாரே? அது எந்த நிலையில் உள்ளது? என்ன ஆனது? என்று விளக்கம் கேட்டு இருந்தார்கள்.

அதற்கு தகவல் உரிமை சட்டத்தில் கொடுத்த விளக்கத்தில், “14 ஆயிரம் கோடி ரூபாய்க்குதான் முதலீடு வந்து இருக்கிறது” என்று தெளிவாக விளக்கம் தரப்பட்டுள்ளது. எனவே இதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்ன பதில் சொல்லப் போகிறார். இதை மூடி மறைக்கும் செயலில்தான் அரசு ஈடுபடுகிறது.

இப்போது அம்பத்தூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை வழிநெடுக தொழிற்சாலை உள்ளதே? இதற்கு காரணம் கலைஞர்தான். அவர் வெளிநாடு போய் முதலீடுகளை கொண்டு வரவில்லை. அமைச்சர்களும் வெளிநாடு சென்று முதலீட்டை கொண்டு வரவில்லை.

தமிழ்நாட்டில் கலைஞர் ஆட்சியை பார்த்து அவர்களாகவே வந்து இந்த தொழிற்சாலைகளை அமைத்துள்ளனர்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.
Tags:    

Similar News