செய்திகள்
கோப்புப்படம்

தெலுங்கானாவில் பஸ் ஊழியர்கள் போராட்டம் தீவிரம்

Published On 2019-10-17 08:44 GMT   |   Update On 2019-10-17 08:44 GMT
தெலுங்கானாவில் பஸ் ஊழியர்களின் போராட்டத்துக்கு லாரிகள், ஆட்டோ மற்றும் கால்டாக்சி சங்கம் ஆதரவு தெரிவித்து உள்ளன. மேலும் வருகிற 19-ந்தேதி மாநிலம் தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்கள், சம்பள உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 5-ந்தேதி வேலை நிறுத்தத்தை தொடங்கினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் காலக்கெடு விதித்தார். அந்த காலக்கெடுக்குள் பணிக்கு திரும்பாத 48 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தார்.

மேலும் தற்காலிக ஊழியர்களை வைத்து பஸ்களை இயக்கினார். இதனால் தெலுங்கானாவில் பஸ் ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2 ஊழியர்கள் தற்கொலை செய்து கொண்டனர். ஆனால் பஸ் ஊழியர்களுடன் முதல்வர் சந்திரசேகர ராவ் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

இதனால் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம், மறியல் என தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தினமும் நடக்கும் பஸ் ஊழியர்களின் போராட்டத்தால் தெலுங்கானாவில் பதட்டமான சூழ்நிலையே நிலவி வருகிறது. இதனால் போலீசார் மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் பஸ் ஊழியர்களின் போராட்டத்துக்கு லாரிகள், ஆட்டோ மற்றும் கால்டாக்சி சங்கம் ஆதரவு தெரிவித்து உள்ளன. மேலும் வருகிற 19-ந்தேதி மாநிலம் தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இதனால் தெலுங்கானாவில் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளன. இதற்கிடையே கோர்ட்டு உத்தரவிட்டும் முதல்-மந்திரி பேச்சுவார்த்தைக்கு மறுப்பதாக பல்வேறு சங்கங்கள் குற்றம் சாட்டி உள்ளன.
Tags:    

Similar News