செய்திகள்
கோப்புபடம்

ஒரு டோஸ் தடுப்பூசி போட்டிருந்தாலே முகவர்களை அனுமதிக்க வேண்டும் - தேர்தல் கமி‌ஷனுக்கு தி.மு.க. கோரிக்கை

Published On 2021-04-30 08:25 GMT   |   Update On 2021-04-30 08:25 GMT
தமிழகத்தில் 2-ந்தேதி வாக்கு எண்ணும் மையங்களுக்கு செல்லும் வேட்பாளர்களின் முகவர்களுக்கு தேர்தல் ஆணையம் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

சென்னை:

தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி இந்திய தேர்தல் கமி‌ஷனுக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் 2-ந்தேதி வாக்கு எண்ணும் மையங்களுக்கு செல்லும் வேட்பாளர்களின் முகவர்களுக்கு தேர்தல் ஆணையம் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதில் ஆர்.டி.பி.சி.ஆர். சோதனைகள் 48 மணி நேரத்துக்கு முன்பாக நடத்த வேண்டுமா? அல்லது 72 மணி நேரத்துக்கு முன்பாக நடத்த வேண்டுமா? என்பது தெரியவில்லை. இருவேறு அறிவிப்புகள் வந்துள்ளதால் அதை தேர்தல் கமி‌ஷன் தெளிவுப்படுத்த வேண்டும்.

மேலும் தடுப்பூசி ஒரு டோஸ் போட வேண்டுமா? அல்லது 2 டோஸ் போடப்பட வேண்டுமா? என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.

தற்போது தடுப்பூசிக்கு தட்டுப்பாடு உள்ள நிலையில் இன்னும்2 2-வது டோஸ் போடாமல் பலர் உள்ளனர். இந்த சூழலில் முகவர்கள் 2 தடுப்பூசிகள் போட்டிருக்க வேண்டும் என்று வற்புறுத்துவது நடைமுறையில் கடினமான செயலாகும்.


எனவே ஓட்டு எண்ணும் மையங்களில் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டிருந்தாலே முகவர்களை அனுமதிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும். வாக்கு எண்ணும் மையங்களில் முகவர்கள் பிபிஈ சாதனங்களை அணிந்து கொள்ளலாம் என்று தேர்தல் கமி‌ஷன் கூறுகிறது.

கடினமான வெப்பம் நிலவும் இந்த சமயத்தில் பிபிஈ சாதனங்களை 14 மணிநேரம் முதல் 16 மணி நேரம் வரை அணிவது சாத்தியமில்லாததாகும். மேலும் மருத்துவ வல்லுனர்கள் பிபிஈ சாதனங்களை 6 மணிநேரத்துக்கு மேலாக அணிந்து கொண்டிருக்க கூடாது என்று அறிவுரை கூறி உள்ளனர்.

தேர்தல் ஆணையம் போதுமான அளவுக்கு அனைத்து வாக்கு எண்ணும் முகவர்களும் முக கவசங்கள் அணிந்து சானிடைசர்கள் அளிக்கப்பட்டு கையுறை மற்றும் இதர ஏற்பாடுகளை செய்துள்ளது. அப்படி இருக்கும்போது பிபிஈ சாதனங்களை அணிவது நடைமுறையிலும், மருத்துவ ரீதியிலும் அறிவுரை வழங்க தகுந்ததல்ல.

எனவே இந்த கட்டுப்பாடுகளுக்கு தேர்தல் கமி‌ஷன் விளக்கம் அளிக்க வேண்டும். அதுமட்டுமின்றி ஒரு டோஸ் தடுப்பூசி போதுமானது என்று வலியுறுத்தவும், வாக்கு எண்ணும் முகவர்கள் பிபிஈ சாதனம் அணிவது தவிர்க்கப்படவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Tags:    

Similar News