செய்திகள்
மக்கள் கூட்டம்

சென்னையில் தீபாவளி கூட்டத்தை கண்காணிக்க 6,000 போலீசார்- கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை

Published On 2021-10-24 07:38 GMT   |   Update On 2021-10-24 07:38 GMT
தீபாவளிக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமையான வருகிற 31-ந் தேதியும் கூடுதல் பாதுகாப்பு போட சென்னை மாநகர காவல்துறை திட்டமிட்டுள்ளது.
சென்னை:

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில் பொது மக்கள் புத்தாடைகள் வாங்குவதற்கும், பொருட்கள் வாங்குவதற்கும் கடை வீதிகளில் குவிந்து வருகிறார்கள்.

இதற்காக கடந்த வாரம் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் வணிக பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது. அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமையான இன்றும் தி.நகர், பாரிமுனை, வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. இதனை கட்டுப்படுத்துவதற்காக சென்னை மாநகர போலீசார் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் கண்காணிப்புக்கு போலீஸ் கமி‌ஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து தி.நகர் உள்பட சென்னையில் உள்ள அனைத்து வணிக இடங்களிலும் சுமார் 6,000 போலீசாரை பாதுகாப்புக்காக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

பாண்டிபஜாரில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இதுதொடர்பாக கூறும்போது, ‘‘தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் 5 ஆயிரம் 6 ஆயிரம் வரை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவது வழக்கம். அதுபோன்று இந்த ஆண்டும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.



தீபாவளிக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமையான வருகிற 31-ந் தேதியும் கூடுதல் பாதுகாப்பு போடவும் சென்னை மாநகர காவல்துறை திட்டமிட்டுள்ளது.

பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அந்தந்த பகுதிகளை சேர்ந்த இன்ஸ்பெக்டர்களை உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

சென்னையில் பல்வேறு இடங்கள் வணிகப்பகுதிகளாக திகழ்ந்த போதிலும் தி.நகரில்தான் மக்கள் அதிகளவில் பொருட்கள் வாங்குவதற்கு கூடுகிறார்கள். குறிப்பாக தீபாவளி புத்தாடைகளை வாங்குவதற்கு பெண்கள் அதிகளவில் தி.நகருக்கு செல்கிறார்கள்.

இதனால் வார இறுதி நாட்களில் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தி.நகர் ரங்கநாதன் தெருவில் தீபாவளி பொருட்களை வாங்குவதற்காக திரளான மக்கள் திரண்டனர். இன்றும் அதேபோன்று கூட்டம் காணப்பட்டது.

இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட் மற்றும் செயின் பறிப்பு கொள்ளையர்கள், பெண்களிடம் கைவரிசை காட்ட வாய்ப்புள்ளது என்பதால் அதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மாம்பலம் போலீசார் எடுத்துள்ளனர்.

தி.நகர் துணை கமி‌ஷனர் ஹரிகிரன்பிரசாத் உத்தரவின் பேரில், மாம்பலம் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை பல மடங்கு அதிகரித்துள்ளனர்.

பெண்களின் கழுத்தில் அணிந்துள்ள செயினை பாதுகாக்கும் வகையில் சிறிய அளவிலான கவச உடை ஒன்றையும் போலீசார் தயாரித்துள்ளனர். கடந்த ஆண்டும் இந்த கவச உடை பயன்படுத்தப்பட்டது. ரங்கநாதன் தெருவுக்குள் பொருட்கள் வாங்க நுழையும் பெண்களை நிறுத்தி அவர்களின் கழுத்தில் அந்த கவச உடைகளை போலீசார் அணிவித்து விடுவார்கள்.

இதனை அணிந்த பிறகு பெண்களின் கழுத்தில் கிடக்கும் செயின் முழுமையாக மறைக்கப்பட்டுவிடும். இதன் மூலம் கூட்டநெரிசலில் செயின் பறிப்பை முழுமையாக கட்டுப்படுத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


இதுதவிர கூட்டத்துக்குள் நடந்து சென்றே சந்தேக நபர்களை கண்காணிப்பதற்காக சட்டை கேமராக்களும் பயன்படுத்தப்பட உள்ளது. தி.நகர் ரங்கநாதன் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் தங்களது சட்டையில் கேமராக்களை பொருத்திக் கொண்டு சீருடையிலும், சாதாரண உடையிலும் கூட்டத்துக்குள் சென்று கண்காணித்து வருகிறார்கள்.

இதன் மூலம் சந்தேக நபர்கள் சுற்றித்திரிந்தால் அவர்களை எளிதாக பிடிப்பதற்கு வழி ஏற்பட்டுள்ளது.

உஸ்மான் ரோடு, ரங்கநாதன் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பழுதான கேமராக்களை அகற்றிவிட்டு புதிதாக 40 கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை கண்காணிக்க 2 இடங்களில் போலீஸ் உதவி மற்றும் கண்காணிப்பு மையம் ஏற்படுத்தப்பட உள்ளது. இன்னும் 2 அல்லது 3 நாட்களில் இந்த கண்காணிப்பு மையங்கள் திறக்கப்பட உள்ளன.

தற்போது ரங்கநாதன் தெருவில் சுழற்சி முறையில் 40 போலீசார் பணியாற்றி வருகிறார்கள். இந்த எண்ணிக்கையை அடுத்த சில நாட்களில் அதிகப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தி.நகர் பகுதியில் மட்டும் தீபாவளியையொட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்கு கூடுதலாக 150 போலீசார் பணியமர்த்தப்பட உள்ளனர். சென்னையில் மற்ற காவல் நிலையங்களில் இருந்து இந்த போலீசார் தி.நகர் பகுதிக்கு காவல் பணிக்கு செல்ல உள்ளனர்.

கூட்ட நெரிசலில் குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க ரங்கநாதன் தெருவில் 6 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளது.

அங்கிருந்தபடியே போலீசார் பைனாகுலரில் கண்காணித்து வருகிறார்கள். இதன் மூலம் தூரத்தில் இருக்கும் சந்தேக நபர்களையும், குற்றவாளிகளையும் பிடிக்க முடியும் என்று போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர்.

இதுதவிர டிரோன்கள் மூலமாகவும் கூட்டத்தை கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரங்கநாதன் பகுதியில் இருந்து உஸ்மான் ரோடு வரை இந்த டிரோன்கள் பறக்க விடப்படுகிறது.

தி.நகர் பஸ் நிலையம் அருகில் பெரிய எல்.இ.டி. திரை ஒன்றும் அமைக்கப்பட உள்ளது. அந்த திரையில் கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய வீடியோக்களை திரையிடவும், குற்றவாளிகள் பற்றிய தகவல்களை வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த எல்.இ.டி. திரை விரைவில் அமைக்கப்பட உள்ளது. ரங்கநாதன் தெருவில் மேற்கொள்ளப்பட உள்ள விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை உயர் அதிகாரிகள் வருகிற 27 அல்லது 28-ந் தேதி ஆய்வு செய்ய உள்ளனர்.

தீபாவளியையொட்டி ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் முக்கியமாக கடைகளுக்கான நேரக்கட்டுப்பாடு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனை கடை உரிமையாளர்கள் கடைபிடிக்கிறார்களா என்பதை ஆய்வு செய்ய சென்னை மாநகராட்சி அதிகாரிகளும், காவல்துறையினரும் திட்டமிட்டுள்ளனர். கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பலூன் ஒன்றும் தி.நகர் பகுதியில் பறக்கவிடப்பட உள்ளது.

தி.நகரை போன்று வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, புரசைவாக்கம், பெரம்பூர், செங்குன்றம், திருவொற்றியூர் புறநகர் பகுதிகளான தாம்பரம், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களிலும் தேவையான அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கான நடவடிக்கைகளை அந்தந்த பகுதிகளை சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.



Tags:    

Similar News