ஆன்மிகம்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.

மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் மாசித்திருவிழா கொடியேற்றம்

Published On 2021-03-01 07:31 GMT   |   Update On 2021-03-01 07:31 GMT
மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலும் ஒன்று. கேரள பெண் பக்தர்கள் இரு முடிக்கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படுகிறது.

இங்கு மாசிக்கொடை விழா 10 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடப்பது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான மாசிக்கொடை விழா கொடியேற்றம் நேற்று காலை நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 6.30 மணிக்கு உஷபூஜை, சிறப்பு செண்டை மேளம் நடந்தது. காலை 7.45 மணியளவில் திருவிழா கொடியை கோவில் தந்திரி சங்கர நாராயணன் ஏற்றினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அம்மனுக்கு சீர் கொண்டு செல்லும் நிகழ்ச்சியும், 1 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை, 9 மணிக்கு அத்தாழ பூஜை ஆகியவை நடந்தது.

விழாவில் இன்று(திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு ஸ்ரீசாய் சத்சரிதம், 10 மணிக்கு மகாபாரத விளக்கவுரை, இரவு 8 மணிக்கு இன்னிசை, நாளை(செவ்வாய்க்கிழமை) முதல் 8-ந்தேதி வரை காலை 9.30 மணி, இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி, மாலை 5 மணிக்கு பரத நாட்டியம், இரவு 9 மணிக்கு கதகளியும் நடக்கிறது. விழாநாட்களில் தினமும் காலை 6.30 மணி, மதியம் 1 மணி, மாலை 6.30 மணி, இரவு 9 மணிக்கு தீபாராதனை நடக்கிறது.

5-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் வலியபடுக்கை பூஜை நடக்கிறது.

விழாவின் கடைசிநாளான 9-ந்தேதி அதிகாலை 2 மணிக்கு ஸ்ரீகண்டன் சாஸ்தா கோவிலில் இருந்து களபம் பவனி, 3.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி, 5 மணிக்கு திருநடை அடைப்பு, 5.30 மணிக்கு பூமாலை, பகல் 12 மணிக்கு குத்தியோட்டம், மாலை 5 மணிக்கு நடைதிறப்பு, இரவு 9 மணிக்கு பக்தி இன்னிசை, நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை, தீபாராதனை, தொடர்ந்து கொடியிறக்கம் ஆகியவை நடைபெறுகிறது.
Tags:    

Similar News