செய்திகள்
கேளிக்கை விருந்து நிகழ்ச்சி நடந்த இடம்

பிரான்ஸ்: கொரோனா விதிகளை மீறி புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஒரே இடத்தில் கூடிய 2,500 பேர்

Published On 2021-01-03 17:31 GMT   |   Update On 2021-01-03 17:31 GMT
பிரான்சில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது விருந்து நிகழ்ச்சியில் சட்டவிரோதமாக 2 ஆயிரத்து 500-க்கும் அதிகமானோர் கூடியுள்ளனர்.
பாரிஸ்:

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2021-ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் எந்த வித ஆரவாரமும் இன்றி நடைபெற்றது. பல நாடுகள் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மக்கள் கூட்டமாக கூட தடை போட்டு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.

ஆனாலும், பல நாடுகளில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி 31-ம் தேதி இரவு கூடி புத்தாண்டு கொண்டாட்டங்களை மது விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்று கொண்டாடினர்.

அந்த வகையில், பிரான்ஸ் நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மக்கள் கூட்டமாக கூட அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. ஆனால், பலரும் தடையை மீறி கூட்டமாக கூடி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக, பிரான்ஸ் நாட்டின் பிரிட்டனி மாகாணம் ரினெஸ் நகரில் உள்ள ஒரு கட்டிடத்தின் கடந்த 31-ம் தேதி இரவு கூடிய சுமார் 2 ஆயிரத்து 500 பேர் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

இந்த கேளிக்கை நிகழ்ச்சியில் மது விருந்து, ஆட்டம் பாட்டம் என அனைவரும் ஒன்றினைந்து புத்தாண்டை கொண்டாடியுள்ளனர். இந்த புத்தாண்டு கொண்டாட்டங்கள் அனைத்தும் போலீசாருக்கு தெரியாமலேயே நடந்துள்ளது.

இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடிந்து நேற்று அந்த கட்டிடத்தில் இருந்து ஒரே நேரத்தில் பெருமளவில் மக்கள் வெளியே வந்தனர். அப்போது அப்பகுதியில் பாதுகாப்புக்காக நின்றுகொண்டிருந்த போலீசார் அதிக அளவில் கட்டிடத்திற்குள் இருந்து மக்கள் வருவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக அந்த கட்டிடத்திற்குள் அதிரடியாக நுழைந்த போலீசார் அங்கு ஆய்வு நடத்தினர். அப்போது, சட்டவிரோதமாக கூடி 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்களை தங்கள் கட்டுப்பாடின் கீழ் கொண்டுவந்த போலீசார் சட்டவிரோத புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும், அந்த புத்தாண்டு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா தடுப்பு நடைமுறைகளை மீறியதற்காக இதுவரை 1,000-க்கும் அதிகமானோருக்கு அபராதம் விதித்துள்ளனர். தப்பிச்சென்ற எஞ்சியோரை தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

சட்டவிரோதமாக புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்றவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா பரவியுள்ளது என்பதை கண்டறியும் நடவடிக்கையில் பிரான்ஸ் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News