செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

சென்னையில் இன்று மாலை எடப்பாடி பழனிசாமி வீதி வீதியாக பிரசாரம்

Published On 2021-03-28 03:50 GMT   |   Update On 2021-03-28 03:50 GMT
தேர்தல் தேதி மற்றும் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பதற்கு முன்பே கடந்த டிசம்பர் மாதம் முதல் ஒவ்வொரு மாவட்டமாக சென்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்து வந்தார்.
சென்னை:

சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார்.

தேர்தல் தேதி மற்றும் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பதற்கு முன்பே கடந்த டிசம்பர் மாதம் முதல் ஒவ்வொரு மாவட்டமாக சென்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்து வந்தார்.

அதன் பிறகு கடந்த மாதம் வேட்பாளர் பட்டியல் அறிவித்த பிறகு தொகுதி வாரியாக சென்று பிரசாரம் மேற்கொண்டார். எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அவரை ஆதரித்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் செய்திருந்தார்.

இதேபோல் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடும் போடி நாயக்கனூர் தொகுதிக்கு சென்று எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். தென் மாவட்டங்களில் பிரசாரத்தை முடித்த முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நேற்று இரவு சென்னை திரும்பினார்.

சென்னையில் இன்று முதல் 3 நாட்கள் பிரசாரம் செய்ய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.

வடசென்னையில் இன்று மதியம் 3 மணிக்கு வீதி வீதியாக சென்று பிரசாரம் மேற்கொள்கிறார். முதலில் சென்னை ராயபுரம் தொகுதிக்கு சென்று கல்மண்டபம் சாலையில் பேசுகிறார். திரு.வி.க.நகர் வேட்பாளரை ஆதரித்தும் அங்கு பேசுகிறார்.

அதன் பிறகு 4 மணிக்கு திருவொற்றியூர் சென்று வடிவுடையம்மன் கோவில் அருகில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

4.45 மணிக்கு ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட மணலி சாலை சந்திப்பு அருகில் பிரசாரம் செய்கிறார். பின்னர் அங்கிருந்து பெரம்பூர் தொகுதிக்கு சென்று முல்லைநகர் டி.வி.கே. லிங்க் ரோடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு அருகே பேசுகிறார்.

மாலை 6.45 மணிக்கு கொளத்தூர் தொகுதியில் உள்ள பெரவல்லூர் சந்திப்பில் பேசுகிறார். 7.45 மணிக்கு வில்லிவாக்கம் நாதமுனி தியேட்டர் அருகே பிரசாரம் செய்கிறார். இரவு 8.30 மணிக்கு புளியந்தோப்பு நெடுஞ்சாலை அம்பிகா ஓட்டல் அருகில் திரு.வி.க.நகர், எழும்பூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

அதன் பிறகு இரவு 9.15 மணிக்கு துறைமுகம் தொகுதிக்கு சென்று பாரதி மகளிர் கல்லூரி அருகே திரண்டிருக்கும் கூட்டத்தில் பேசுகிறார்.

மொத்தம் 10 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து 8 இடங்களில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் செய்கிறார். இதையொட்டி அதற்கான ஏற்பாடுகளை அ.தி.மு.க.வினர் பிரமாண்டமாக செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News