ஆன்மிகம்
12 அடி உயரத்தில் 5 முகங்களுடன் காட்சி அளிக்கும் பிரத்யங்கிராதேவி, கோவிலில் நடைபெறும் நிகும்பலா யாகம்.

வந்தாரை வாழவைக்கும் திருவிசநல்லூர் பஞ்சமுக பிரத்யங்கிராதேவி கோவில்

Published On 2021-08-09 07:55 GMT   |   Update On 2021-08-09 07:55 GMT
வேறு எங்கும் காண முடியாத வகையில் பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி 12 அடி உயரத்தில் 5 முகங்களுடன் அமர்ந்த கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறாள்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பூம்புகார் சாலையில் 7 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது திருவிசநல்லூர் என்னும் கிராமம். இந்த கிராமத்தில் காவிரியின் வடகரையில் அமைந்துள்ளது பஞ்சமுக மகா மங்கல பிரத்யங்கிராதேவி கோவில்.

வேறு எங்கும் காண முடியாத வகையில் பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி 12 அடி உயரத்தில் 5 முகங்களுடன் அமர்ந்த கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறாள். இத்தலத்தில் அமைந்துள்ள சுவாமி பெயர் சிதம்பரேஸ்வரர். அம்மன் பெயர் சிவகாம சுந்தரி. இந்த ஆலயம் மேற்கு திசையை பார்த்து அமைந்துள்ளது.

இந்த கோவிலில் ஐப்பசி கடைமுகம் அன்று பஞ்சமூர்த்திகள் வீதி உலா வந்து காவிரியில் தீர்த்தவாரி நடைபெறும். மாதந்தோறும் பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, கிருத்திகை போன்ற விசேஷமான நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

மிளகாய் யாகம்

மாதந்தோறும் அமாவாசை அன்று காலை 10 மணி முதல் நிகும்பலா யாகம் நடைபெறும். யாக குண்டத்தில் பட்டுப்புடவை, மிளகாய் வற்றல் ஆகியவை போடப்பட்டு இந்த யாகம் நடைபெறும். இந்த மிளகாய் யாகத்தில் கலந்து கொண்டு பிரத்யங்கிரா தேவியை மன முக தரிசனம் செய்பவர்களுக்கு பகை, கடன், நோய் அகலும். சகலவித நன்மைகள் உண்டாகும். தீவினைகள் அடியோடு விலகும். பொன், பொருள் வாங்கும் யோகம் அதிகரிக்கும். தொழில், வேலை, உத்தியோகம் அபிவிருத்தி அடைந்து பணம் வரவு அதிகரித்து வளம் உண்டாகும்.

திருமணத்தடை நீக்கி விரைவில் திருமணம் நடைபெற பிரத்யங்கிராதேவி கோவிலில் சிறப்பு யாகம் நடக்கிறது. இதில் கலந்து கொள்பவர் களுக்கு திருமணத்தடை நீங்குகிறது என இங்கு வரும் பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். தீபாவளி அமாவாசை அன்று இனிப்பு பலகாரம், 1008 லட்டு யாகமும் இங்கு நடைபெறுகிறது.

இந்த கோவிலின் பல்வேறு சிறப்புகள் குறித்து பிரத்யங்கிரா தேவி கோவில் பரம்பரை அறங்காவலர் டி.கணேஷ் குமார் சிவாச்சாரியார் கூறியதாவது:-

சிங்க முகங்கள் பூட்டிய ரதத்தில்...

சக்தியின் உக்கிரமான வடிவம்தான் பிரத்யங்கிராதேவி. இந்த பிரத்யங்கிராதேவி 5 சிங்க முகங்கள் பூட்டிய ரதத்தில் மிக கோபமான பார்வையோடும், உக்கிரமான வேகத்தோடும் காட்சி தருகிறார். இங்கு ஒவ்வொரு அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் ஹோமம் நடக்கிறது. அந்த ஹோமத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பயன்பெறுகின்றனர்.

பணம் படைத்தவர்களால், அதிக உடல் பலம் படைத்தவர்களால் நல்லோர்கள் ஏமாற்றப்படுதலும், வதைபடுதலும், அதிகம் நடக்கிறது. அப்படி வதைபடுபவர்களால் பதிலுக்கு எதுவும் செய்ய முடியவில்லை. அதிகாரத்தை, உடல் பலத்தை, பண பலத்தை எதிர்க்க சக்தி இல்லை.

அப்படி சக்தி இல்லாதவர்கள் தங்களுடைய குறைகளை தெய்வத்திடம் முறையிடுகிறார்கள். அப்படி முறையிடுகிற கோவில்களில் மிக முக்கியமானது திருவிசநல்லூரில் வீற்றியிருக்கும் மகாமங்கல பிரத்யங்கிராதேவி கோவில்.

கைமேல் பலன் கிடைக்கும்


வந்தாரை வாழவைக்கும் இந்த மகாமங்கல பிரத்யங்கிரா தேவி கைமேல் பலன் தருவாள். உங்களை அழிக்க எவர் நினைத்தாலும், உங்களை வதைக்க எவர் முயன்றாலும் இங்கு வந்து ஒரு நிமிடம் மனமுருகி தேவியின் பெயரை சொல்லி அழைத்து, எனக்கு இந்த துன்பம் இருக்கிறது. அதை தயவு செய்து நீக்கிவிடு என்று சொன்னால் போதும். உங்கள் எதிரிகளை வெகுநிச்சயமாக அவள் துவம்சம் செய்வாள். அதே நேரத்தில் உங்கள் கோரிக்கையில் நியாயம் இருக்க வேண்டும் என்பதுதான் மிக மிக முக்கியம்.

ஒவ்வொரு அமாவாசையன்றும், பவுர்ணமியன்றும் நடக்கும் யாகத்தின் உச்ச கட்டமாக வட மிளகாயை அம்பாளுக்கு நிவேதனம் செய்வார்கள். மூட்டை, மூட்டையாய் மிளகாயை கொட்டுவார்கள். ஆனாலும் ஒரு சிறு கமறல் கூட அங்கு எழாது. சகலமும் அவள் உள்வாங்கிக்கொண்டு விடுகிறாள். இந்த யாகத்தில் கலந்து கொள்பவர்களுக்கு நினைத்த காரியம் நிறைவேறும். தீயசக்திகள் விலகி, செல்வ வளம் பெருகும். வெளிநாடு செல்லும் எண்ணம் நிறைவேறும். எதிரிகள் தொல்லை நீங்கி சகல நன்மைகள் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

திருமணத்தடை நீக்கும் ராகு கால பூஜை

இந்த கோவிலில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் ராகுகாலத்தில் மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை நடைபெறும் ராகு கால பூஜையில் பங்கேற்பதால் திருமணத்தடை நீங்கும். புது வீடு வாங்கும் எண்ணம் உள்ளவர்களுக்கு உடன் கை கூடும், வேலையில் நிரந்தரம் எதிர்பார்ப்பவர்களின் எண்ணம் ஈடேறும், வெளிநாட்டு உத்தியோகம் எதிர்பார்ப்பவர்களின் எண்ணம் 11 வாரத்தில் ஈடேறும். அரசு உத்தியோகம் எதிர்பார்ப்பவர்களுக்கு அதிவிரைவில் நிரந்தர உத்தியோகம் கிடைக்கும்.

மங்கள பிரத்யங்கிராவாகிய இவ்வாலயத்தில் 11 செவ்வாய்க்கிழமை உங்கள் வேண்டுதல்கள் எதுவாயினும் அதனை நினைத்து 9 எலுமிச்சம்பழம் மாலை சாற்றி ஒரு எலுமிச்சம்பழம் தீபம் ஏற்றி 11 வாரம் பூஜையில் பங்கு பெற்று 12-வது வாரம் ஸ்ரீ எந்திரம் ஆலயத்தில் இருந்து பெற்று வீட்டில் வைத்து வழிபட நினைத்தது நடக்கும், கேட்டது கிடைக்கும்.

ஆடி அமாவாசையையொட்டி இன்று நண்பகல் 12 மணிக்கு மிளகாய் யாகம்

உலக நலன் வேண்டியும், கொரோனா வைரஸ் உலகத்தை விட்டு செல்ல வேண்டியும் அடுத்த மாதம்(ஆவணி)பவுர்ணமி அன்று ஆகஸ்டு 22-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு 108 சுமங்கலி பூஜை நடைபெறுகிறது நேரில் வந்து தரிசனம் செய்தால் ஒரே நேரத்தில் 108 சுமங்கலி பெண்களின் ஆசிகள் கிடைக்கப்பெற்று நலம் பெறலாம்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆடி அமாவாசையையொட்டி நண்பகல் 12 மணிக்கு மிளகாய் யாகம் நடைபெற்றது. இவ்வாலய யாகத்தில் பங்கு பெற்றால் ஸ்ரீ பஞ்சமுக மகா மங்கள பிரத்யங்கிராதேவி தங்கள் வேண்டுதல்கள் எதுவாகினும் அதனை நிறைவேற்றி தாங்கள் நினைத்தது நடக்கும், கேட்டது கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

கோவில் நடை திறக்கும் நேரம்

இந்த கோவில் தினமும் காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கும்பகோணத்தில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு கும்பகோணத்தில் இருந்து அரசு மற்றும் தனியார் பஸ் வசதி உள்ளது.

மிளகாய் அரைத்து சாற்றி வழிபாடு

தமிழகத்திலேயே தனிச்சிறப்பாக இவ்வாலயத்தில் உள்ள அனுமன் நேரெதிர் சனி பகவானை பார்க்கிறார். ஏழரை சனி, அஷ்டமத்து சனி, அர்தாஷ்டம சனி, கண்டக சனி தோஷம் உள்ளவர்கள் சனிக்கிழமைகளில் வழிபட கிரக தோஷங்கள் அறவே விலகும்.

இவ்வாலயத்தில் உள்ள திரிசூலத்தில் பில்லி, சூனியம், உடல் வியாதி, தீராத மன நோய், குடும்ப கஷ்டம், போட்டிகள், பெரும்பகை இவற்றினை களைய பக்தர்கள் மிளகாய் அரைத்து தாங்களே சாற்றி பலன் பெறலாம்.
Tags:    

Similar News