ஆன்மிகம்
சிவலோகநாத சாமி கோவிலில் விதைத்தெளி உற்சவம் நடந்தபோது எடுத்தபடம்.

சிவலோகநாத சாமி கோவிலில் விதைத்தெளி உற்சவம்

Published On 2020-08-10 04:18 GMT   |   Update On 2020-08-10 04:18 GMT
காரைக்கால் சிவலோகநாத சாமி கோவிலில் விதைத்தெளி உற்சவம் பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது.
மழையின்றி வறண்டதால் பாதிக்கப்பட்ட மக்கள், விவசாயிகள் மழைவேண்டி சிவனை வழிபட்டனர். பக்தர்களின் வேண்டுதலை ஏற்று, சிவபெருமான் விவசாயியாக தோன்றி நிலத்தில் உழுது, விதைத்தெளித்தார். அப்போது மழை கொட்டியதாக புராண வரலாற்றில் கூறப்படுகிறது.

இந்த வரலாற்று நிகழ்ச்சியை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் காரைக்கால் தலத்தெருவில் உள்ள சிவலோகநாத சாமி கோவிலில் விதைத்தெளி என்ற உற்சவம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான வரலாற்று நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. இதில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து கோவில் பிரகாரத்தில் சாமி, அம்பாள் உற்சவ சிலைகள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. இதில் ஒரு சில விவசாயிகள் மட்டும் கலந்துகொண்டு, மழை வேண்டி வழிபட்டனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த உற்சவ நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் இன்றி எளிமையான முறையில் விழா நடைபெற்றது. ஏற்பாடுகளை அறங்காவல் குழு நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News