செய்திகள்
கடலூர் பஸ் நிலையத்தில் உள்ள ஒரு கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்த போது எடுத்த படம்.

கடலூர் பஸ் நிலையத்தில் வாடகை பாக்கி செலுத்தாத 7 கடைகளுக்கு சீல்

Published On 2021-11-24 13:23 GMT   |   Update On 2021-11-24 13:23 GMT
கடலூர் பஸ் நிலையத்தில் வாடகை பாக்கி செலுத்தாத 7 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்துள்ளனர்.
கடலூர்:

கடலூர் மாநகராட்சிக்கு சொந்தமாக பஸ் நிலையத்தில் 107 கடைகள் உள்ளன. இந்த கடைகள் அனைத்தும் வாடகைக்கு விடப்பட்டு, மாநகராட்சி மூலம் மாதந்தோறும் வாடகை வசூலிக்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் முறையாக வாடகை செலுத்தி வந்த நிலையில், கடந்த 2016-ம்ஆண்டு அனைத்து கடைகளுக்கும் வாடகை இருமடங்காக உயர்த்தப்பட்டது.

இதனால் பலர் வாடகை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளனர். அந்த வகையில் இதுவரை மொத்தம் ரூ.10 கோடி வாடகை பாக்கி வைத்துள்ளனர். இந்த நிலையில் கடலூர் பஸ் நிலையத்தில் 3 செல்போன் கடைகள் உள்பட 7 கடைகளின் உரிமையாளர்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வாடகை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளனர். அதாவது 7 கடைகளின் உரிமையாளர்களும் சுமார் ரூ.4½ லட்சம் பாக்கி வைத்துள்ளனர். இதனால் வாடகை பாக்கியை செலுத்தும்படி மாநகராட்சி ஊழியர்கள் நோட்டீஸ் விடுத்தும், அவர்கள் வாடகை செலுத்தவில்லை.

இந்த நிலையில் வாடகை பாக்கி வைத்துள்ள 7 கடைகளுக்கும் ‘சீல்’ வைக்கும்படி மாநகராட்சி கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்படி வருவாய் அலுவலர் வெங்கடேசன் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் பாஸ்கரன், அசோகன் மற்றும் வருவாய் உதவியாளர்கள் நேற்று கடலூர் பஸ் நிலையத்தில் வாடகை பாக்கி செலுத்தாத 7 கடைகளை பூட்டி சீல் வைத்தனர். ஒரே நேரத்தில் 7 கடைகளுக்கு அடுத்தடுத்து அதிகாரிகள் ‘சீல்’ வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே அதிகாரி ஒருவர் கூறுகையில், கடலூர் மாநகராட்சிக்கு இன்னும் பலர் வாடகை பாக்கி செலுத்த வேண்டி உள்ளது. அவர்கள் விரைவில் வாடகை பாக்கி செலுத்தவில்லை யெனில், அந்த கடைகளுக்கும் ‘சீல்’ வைக்கப்படும் என கூறினார்.

Tags:    

Similar News