செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 7 மாணவ-மாணவிகள் கொரோனாவால் பாதிப்பு

Published On 2021-09-14 04:36 GMT   |   Update On 2021-09-14 04:36 GMT
அந்தியூர் அடுத்த பருவாச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு:

தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் தொற்று குறைய தொடங்கியதால் முதற்கட்டமாக 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு நேரடி வகுப்புகள் கடந்த 1-ந் தேதி முதல் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.

அரசு தெரிவித்துள்ள பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடந்து வருகின்றன. ஒரு வகுப்பில் 50 சதவீதம் மாணவ-மாணவிகள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தினமும் உடல் வெப்பநிலையை பரிசோதிக்கும் வகையில் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் 395 பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் படிக்கும் 11-ம் வகுப்பு மாணவனுக்கு முதல் முறையாக தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அந்த மாணவன் வகுப்பில் இருந்த மற்ற மாணவ-மாணவிகள், ஆசிரியர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் யாருக்கும் பாதிப்பும் இல்லை. இந்நிலையில் கோபி கல்வி மாவட்டம் சிறுவலூர் மணியக்காரன்புதூரில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தொற்று உறுதியான மாணவி படிக்கும் வகுப்பறை மற்றும் பள்ளி வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. உடன்படிக்கும் மாணவ-மாணவிகள், மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என முடிவு வந்தது.

இதையடுத்து பள்ளிகளில் தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக பின்பற்றப்பட்டன. ஊரில் யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டால் அந்த ஊரிலிருந்து பள்ளிக்கு படிக்க வரும் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் உறவினர்கள், வீட்டில் உள்ளவர்களுக்கு யாருக்காவது சளி, காய்ச்சல் உள்ளதா? என்ற விவரங்களையும் ஆசிரியர்கள் கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஒரு சில பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கவுந்தபாடி மாதிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 9-ம் வகுப்பு மாணவர்கள் 2 பேருக்கும், 10-ம் வகுப்பு மாணவர்கள் 2 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அங்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அந்த பள்ளியில் பணிபுரியும் 41 ஆசிரியர்கள், மாணவர்கள், பணியாளர்கள் உட்பட 407 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் இன்று இரவு வர உள்ளது. அதுவரை பரிசோதனை செய்து கொண்டவர்கள் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து கவுந்தப்பாடி மாதிரி அரசு ஆண்கள் பள்ளி காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வந்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் அந்தியூர் அடுத்த பருவாச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் மாணவர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதையடுத்து அந்த பள்ளியில் படிக்கும் மற்ற மாணவர்கள், ஆசிரியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் இன்று வெளி வரும். ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 7 மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News