ஆன்மிகம்
சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி-தெய்வானையுடன் ரதத்தில் எழுந்தருளி, உள்பிரகாரத்தில் உலா வந்தபோது எடுத்த படம்.

ஆவணி திருவிழா: சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி-தெய்வானையுடன் ரதத்தில் உலா

Published On 2021-09-06 06:08 GMT   |   Update On 2021-09-06 06:08 GMT
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழாவின் 10-ம் நாளான நேற்று சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி-தெய்வானையுடன் சிறிய ரதத்தில் எழுந்தருளி, உள்பிரகாரத்தில் உலா வந்து அருள்பாலித்தார்.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த மாதம் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தொடர்ந்து 2-ம் ஆண்டாகவும் பக்தர்கள் பங்கேற்பின்றி விழா எளிமையாக நடந்தது. அனைத்து நிகழ்ச்சிகளும் கோவில் உள்பிரகாரத்திலேயே நடைபெற்றது.

10-ம் திருநாளான நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டத்துக்கு பதிலாக சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி- தெய்வானையுடன் உள்பிரகாரத்தில் சிறிய ரதத்தில் உலா வந்தார். இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

காலை 6.15 மணிக்கு கோவில் உள்பிரகாரத்தில் உள்ள ஐராவத மண்டபத்தில் ரத பவனி நிகழ்ச்சி தொடங்கியது. முதலில் விநாயகர் எழுந்தருளிய சிறிய ரதம் உள்பிரகாரத்தில் உலா வந்து மீண்டும் ஐராவத மண்டபத்தை வந்தடைந்தது.

தொடர்ந்து சுவாமி குமரவிடங்க பெருமான்-வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் அதே சிறிய ரதத்தில் எழுந்தருளி, உள்பிரகாரத்தில் உலா வந்து அருள்பாலித்தார். தொடர்ந்து வள்ளி அம்பாளும் அதே ரதத்தில் எழுந்தருளி, உள்பிரகாரத்தில் வலம் வந்து காட்சி அளித்தார்.

விழா நிகழ்ச்சிகள் யூ-டியூப் இணையதளத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 10 நாட்களுக்கு பிறகு இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 9-ந்தேதி (வியாழக்கிழமை) வரையிலும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
Tags:    

Similar News