செய்திகள்
வீடு, வீடாக சென்று கள ஆய்வு மேற்கொள்ளும் பணியில் ஈடுபட்டுள்ள குழுவினர்.

விழுப்புரம், திண்டிவனத்தில் கொரோனா பரவலை தடுக்க வீடு, வீடாக தீவிர கண்காணிப்பு

Published On 2021-05-09 02:51 GMT   |   Update On 2021-05-09 02:51 GMT
விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட 42 வார்டுகளில் 839 தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களில் உள்ள 36,679 வீடுகளில் நேற்று முன்தினம் முதல் மருத்துவ பரிசோதனை செய்யும் பணி நடைபெற்றது.
விழுப்புரம்:

கொரோனா நோய் பரவலை முற்றிலும் கட்டுப்படுத்தும் வகையில் விழுப்புரம், திண்டிவனம் நகராட்சி பகுதிகளில் வீடு, வீடாக சென்று மருத்துவ பரிசோதனை செய்யும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று 2 நகராட்சி அதிகாரிகளுக்கும் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டார்.

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட 42 வார்டுகளில் 839 தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களில் உள்ள 36,679 வீடுகளில் நேற்று முன்தினம் முதல் மருத்துவ பரிசோதனை செய்யும் பணி நடைபெற்றது. இப்பணியில் சுகாதாரத்துறையினர், நகராட்சி ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் என 200 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.

கொரோனா தொற்றால் யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை கண்டறிய அந்த குழுவினர் நகரம் முழுவதும் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்து வருகின்றனர். இக்குழுவினர் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று அங்குள்ள பொதுமக்களிடம் காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் ஏதேனும் இருக்கிறதா? என்று கேட்டறிவதோடு தெர்மல் ஸ்கேனர் மூலம் அவர்களது உடல் வெப்பநிலையையும் பரிசோதித்து கொரோனா பரவலை தடுக்க உரிய ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

இந்த ஆய்வின்போது பொதுமக்களில் யாருக்காவது கொரோனா அறிகுறி இருந்தால் அவர்களை உடனடியாக கொரோனா பரிசோதனைக்கு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் நோய் தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் இக்குழுவினர் கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை செய்யும் பணியையும் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் வீடு, வீடாக ஆய்வு மேற்கொள்ளும் இக்குழுவினர் பொதுமக்களிடம் இந்நோய் பரவலின் தாக்கம், அதனால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதால் ஏற்படும் பயன்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இப்பணியை நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி, நகர்நல அலுவலர் டாக்டர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இதேபோல் திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளில் உள்ள 23,100 குடியிருப்புகளிலும் நகராட்சி ஊழியர்கள், சுகாதாரத்துறையினர், அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் 150-க்கும் மேற்பட்டோர் வீடு, வீடாக சென்று கள ஆய்வு மேற்கொண்டு கொரோனா அறிகுறி இருப்பவர்களை கண்டறிந்து அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News