செய்திகள்
கைது

‘பேஸ்புக்’ வலைதளத்தில் இளம்பெண்கள் படத்தை ஆபாசமாக பதிவிட்ட வாலிபர் கைது

Published On 2019-11-05 06:35 GMT   |   Update On 2019-11-05 06:35 GMT
‘பேஸ்புக்’ வலைதளத்தில் இளம்பெண்களின் படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து பதிவிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அம்பத்தூர்:

காஞ்சிபுரம் அடுத்த பெரிய காஞ்சி பகுதியைச் சேர்ந்தவர் கெய்ஷ்முகமது. முதுநிலை பட்டதாரியான இவர் தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

இவர் பேஸ்புக் வலைதள பக்கத்தில் தன்னுடன் பணி செய்யும் பெண் ஊழியர்கள் மற்றும் இளம்பெண்களின் படத்தை ஆபாசமாக ‘மார்பிங்’ செய்து பதிவேற்றி இருந்தார். மேலும் அதில் ஆபாச வாசகங்களும் பதிவிடப்பட்டு இருந்தது.

இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார்.

இதுபற்றி உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் விஜயராகவன் தலைமையிலான தனிப்படை போலீசார் கெய்ஷ்முகமது நடவடிக்கை மற்றும் முகநூல் பக்கத்தை கண்காணித்தனர்.

அப்போது அவர் இளம்பெண்களின் படத்தை ஆபாசமாக பதிவிட்டு வருவதை உறுதி செய்தனர். இதையடுத்து அவரை பொறி வைத்து பிடிக்க முடிவு செய்தனர். அதன்படி கெய்ஷ் முகமதுவுக்கு ஏற்கனவே அறிமுகமான இளம்பெண் ஒருவர் மூலம் செல்போனில் பேச வைத்து அம்பத்தூர் தொழிற்பேட்டை பஸ் நிலையத்துக்கு வரவழைத்தனர்.

அங்கு மறைந்திருந்த தனிப்படை போலீசார் கெய்ஷ் முகமதுவை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பஸ் நிலையம், ரெயில் நிலையம் மற்றும் பொது இடங்களில் செல்லும் பெண்களை அவர்களுக்கே தெரியாமல் படம் பிடித்ததும் பின்னர் அதனை ஆபாசமாக மார்பிங் செய்து பேஸ்புக்கில் பதிவிட்டு வந்தது தெரிய வந்தது.

பேஸ்புக்கில் பல போலியான ஐ.டி.க்களை உருவாக்கி ஏராளமான ஆபாச படங்களை அதில் பதிவிவேற்றி இருக்கிறார். இதில் குடும்ப பெண்கள் பலரது படமும் உள்ளது.

மேலும் கெய்ஷ்முகமது தனது உறவுக்கார பெண்களின் படத்தையும் இதே போல் ஆபாசமாக சித்தரித்திருக்கிறார். அவரது செல்போனில் 100க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் படங்கள் இருந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றி அழித்தனர். ‘பேஸ்புக்’ பக்கத்தில் உள்ள இளம்பெண்களின் ஆபாச படத்தை அழிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இதுதொடர்பாக கைதான கெய்ஷ்முகமது போலீசாரிடம் கூறும் போது, ‘ஆபாச படங்களை தொடர்ந்து பார்ப்பேன். இதனால் அனைத்து பெண்களின் புகைப்படங்களையும் மார்பிங் செய்து பேஸ்புக்கில் பதிவிட்டு பார்த்து அனுபவிப்பேன். எனது உறவினர் புகைப்படத்தையும் இதே போல் செய்தேன்.

பஸ் நிலையம், ரெயில் நிலையம் பகுதிகளில் செல்லும் பெண்களையும் பள்ளிக்கு செல்லும் மாணவிகளையும் அவர்களுக்கே தெரியாமல் படம் எடுப்பேன். பின்னர் அதனை ஆபாசமாக மாற்றி போலியான பேஸ்புக்கில் பதிவிட்டு வந்தேன்’ என்றார்.

இச்சம்பவம் பெண்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக பிடிபட்ட கெய்ஷ்முகமதுவிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.
Tags:    

Similar News