செய்திகள்
கிருஷ்ணப்பா கவுதம்

ஐ.பி.எல். வரலாற்றில் கிருஷ்ணப்பா கவுதம் புதிய சாதனை

Published On 2021-02-19 07:20 GMT   |   Update On 2021-02-19 07:20 GMT
ஐ.பி.எல். வரலாற்றில் சர்வதேச போட்டியில் விளையாடாத வீரர்களில் அதிக தொகைக்கு ஏலம் போனவர் என்ற சாதனையை கிருஷ்ணப்பா கவுதம் படைத்தார்.

சென்னை:

14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் நடத்தப்படுகிறது.

இதற்கான மினி ஏலம் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. ஏலப்பட்டியலில் 164 இந்தியர்கள் உள்பட 292 வீரர்கள் இடம்பெற்று இருந்தனர். இதில் இருந்து 61 பேர் தேர்வு செய்யப்பட வேண்டும்.

ஆனால் ஐ.பி.எல். ஏலத்தில் 22 வெளிநாட்டவர் உள்பட 57 வீரர்கள் விலை போனார்கள். 8 அணிகளும் சேர்த்து இவர்களை ரூ.143 கோடியே 69 லட்சத்துக்கு வாங்கின.

தென்ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் அதிக தொகைக்கு ஏலம் போனார். அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.16.25 கோடிக்கு எடுத்தது. இதற்கு முன்பு யுவராஜ் சிங் ரூ 16 கோடிக்கு ஏலம் போனதே சாதனையாக இருந்தது. அதை கிறிஸ் மோரிஸ் முறியடித்தார். அவருக்கான அடிப்படை விலை ரூ 75 லட்சம் ஆகும்.

கிறிஸ் மோரிசுக்கு அடுத்தப்படியாக நியூசிலாந்து வீரர் கைல் ஜேமிசனை ரூ 15 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வாங்கியது. ஆஸ்திரேலிய அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் ஏலத்தில் 3வது இடத்தை பிடித்தார். அவரை பெங்களூர் அணி ரூ.14.25 கோடிக்கு எடுத்தது.

ஐ.பி.எல் ஏலத்தில் கிருஷ்ணப்பா கவுதம் புதிய சாதனை படைத்தார். அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை ரூ 20 லட்சம் தான். ஆனால் அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ9.25 கோடிக்கு எடுத்தது. இதன் மூலம் அவர் ஐ.பி.எல். வரலாற்றில் சர்வதேச போட்டியில் விளையாடாத வீரர்களில் அதிக தொகைக்கு ஏலம் போனவர் என்ற சாதனையை படைத்தார்.

இதற்கு முன்பு 2018 ஆண்டு ஏலத்தில் குணால் பாண்ட்யா ரூ 8 கோடியே 80 லட்சத்துக்கு ஏலம் போனதே அதிகபட்சமாக இருந்தது. அதன் பிறகு அவர் சர்வதேச போட்டிகளில் விளையாடினார்.

32 வயதான கிருஷ்ணப்பா கவுதம் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஆவார். கர்நாடகாவை சேர்ந்த அவர் கடந்த ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் அணிக்காக ஆடினார். அதற்கு முன்பு ராஜஸ்தான், மும்பை அணிகளில் விளையாடி உள்ளார்.

தமிழக வீரர்களில் ஷாருக்கான் அதிக தொகைக்கு ஏலம் போனார். அவரை பஞ்சாப் அணி ரூ.5.25 கோடிக்கு எடுத்தது.

மற்ற தமிழக வீரர்களான ஹரி நிஷாந்த்தை சென்னை அணியும், சித்தார்த்தை டெல்லி அணியும் தலா ரூ.20 லட்சத்துக்கு எடுத்தன.

ஏலத்துக்கு பிறகும் பஞ்சாப் அணியிடம் தான் கைவசம் அதிகபட்சமாக ரூ. 18.80 கோடி இருக்கிறது. ராஜஸ்தானிடம் ரூ.13.65 கோடியும், ஐதராபாத்திடம் ரூ.6.95 கோடியும் , மும்பை, டெல்லி அணிகளிடம் தலா ரூ.3.65 கோடியும் கொல்கத்தாவிடம் ரூ.3.20 கோடியும், சென்னையிடம் ரூ 2.55 கோடியும்,பெங்களூரிடம் ரூ.35 லட்சமும் எஞ்சியுள்ளன.

Tags:    

Similar News