செய்திகள்
கொரோனா தடுப்பூசி

பண்டிகை காலத்தில் தடுப்பூசி போடும் ஆர்வம் குறைந்தது- திங்கட்கிழமை முதல் மீண்டும் தீவிரம்

Published On 2021-10-16 06:46 GMT   |   Update On 2021-10-16 06:46 GMT
பண்டிகை நாட்களில் தமிழகம் முழுவதும் மொத்தம் 1 லட்சத்து 12 ஆயிரம் பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மெகா சிறப்பு முகாம்கள் மூலம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட அதிகமாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இந்தநிலையில் ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை கொண்டாடப்பட்டது. விசே‌ஷ நாட்களில் பொதுமக்களிடம் தடுப்பூசி போடும் ஆர்வம் குறைந்துள்ளது. வெளியில் செல்வதை தவிர்த்து வீடுகளிலேயே மக்கள் முடங்கி கிடந்தார்கள்.

இதனால் நாளை நடைபெற வேண்டிய மெகா சிறப்பு முகாம்கள் கூட நடத்தப்படவில்லை. பண்டிகை நாட்களில் தமிழகம் முழுவதும் மொத்தம் 1 லட்சத்து 12 ஆயிரம் பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

ஆயுத பூஜையன்று 57 ஆயிரத்து 996 பேரும், நேற்று விஜயதசமியில் 54 ஆயிரத்து 573 பேரும் தடுப்பூசி போட்டனர். 12-ந் தேதி 1 லட்சத்து 27 ஆயிரத்து 642 பேர் போட்டுக்கொண்டனர்.

நேற்று வரை 5 கோடியே 45 லட்சத்து 3 ஆயிரத்து 857 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது 67 சதவீதம் ஆகும். வருகிற வாரத்தில் 70 சதவீதம் இலக்கை அடைய வேண்டும் என்ற அடிப்படையில் தீவிரப்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் கூறியதாவது:-

பண்டிகை காலமாக இருப்பதால் நாளை மெகா சிறப்பு முகாம்கள் நடத்தப்படவில்லை. திங்கட்கிழமை முதல் தடுப்பூசி போடும் பணி மீண்டும் தீவிரப்படுத்தப்படும். தற்போது 50 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

அதனால் வருகிற நாட்களில் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணியை வேகப்படுத்தி இலக்கை அடைய திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News