தொழில்நுட்பம்
ட்விட்டர்

1.7 லட்சம் சீனா ஆதரவு கணக்குகளை அதிரடியாக நீக்கிய ட்விட்டர்

Published On 2020-06-13 08:26 GMT   |   Update On 2020-06-13 08:26 GMT
சீனாவுக்கு ஆதரவான 1 லட்சத்து 70 ஆயிரம் ட்விட்டர் கணக்குகள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளன. இதன் பின்னணி என்ன என்பதும் தெரியவந்துள்ளது.



உலகமெங்கும் குறுகிய செய்திகளை பதிவிடுவதற்கு பயன்படும் சமூக வலைதளமாக ட்விட்டர் செயல்படுகிறது. 14 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட இந்த சமூக வலைதளம், அசுர வளர்ச்சி பெற்றுள்ளது. ஏறத்தாழ 33 கோடி பேர் இதை பயன்படுத்தி வருகிறார்கள்.

பிரதமர் மோடி தொடங்கி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், துருக்கி அதிபர் எர்டோகன், சவுதி அரேபிய மன்னர் சல்மான், பிரான்ஸ் அதிபர் மேக்ரான், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, வெனிசூலா அதிபர் நிகோலஸ் மதுரோ என உலக தலைவர்கள் தொடங்கி சாமானிய மக்கள் வரை ட்விட்டர் வலைதளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சீனாவுக்கு ஆதரவான செய்திகளை பதிவிடுவதற்கு மட்டுமே பயன்படுத்தி வந்த 1 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ட்விட்டர் கணக்குகளை அதிரடியாக நீக்கி, அந்த நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இவற்றில் பல கணக்குகள், கொரோனா வைரஸ் பரவல் தொடர்பானவை என தெரியவந்துள்ளது.

இதில் மிக தீவிரமாக செயல்பட்டு வந்த கணக்குகள் என அடையாளம் காணப்பட்டு 23 ஆயிரத்து 750 கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் நீக்கி உள்ளது. இந்த கணக்குகள் மொத்தமாக 3 லட்சத்து 48 ஆயிரத்து 608 முறை ட்விட் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

1 லட்சத்து 50 ஆயிரம் கணக்குகள் ‘ஆம்ப்ளிபயர்’ கணக்குகள் (பெருக்கி கணக்குகள்) என தெரியவந்துள்ளது. அதாவது, இந்த கணக்குகள், முக்கிய கணக்குகளில் வெளியிடப்பட்ட பதிவுகளை மறு ட்விட் செய்வதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. நீக்கப்பட்டுள்ள கணக்குகளில் பெரும்பாலானவை, கொரோனா வைரஸ் பரவல் மற்றும் ஹாங்காங் விவகாரங்களில் சீனாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.



இந்த கணக்குகளை ஆராய்ந்து வந்த ட்விட்டர் நிபுணர்கள், இவை ஹாங்காங் ஆர்ப்பாட்டங்கள், கொரோனா வைரஸ் தொற்று பரவல் உள்ளிட்ட விவகாரங்களில் தவறான தகவல்களை முன் வைத்ததாக தெரிவித்துள்ளனர். 

மேலும் இந்த கணக்குகள், சீன கம்யூனிஸ்டு கட்சிக்கு சாதகமான புவிசார் அரசியல் கதைகளை பரப்பின, ட்விட்டரின் அடிப்படை பயன்பாட்டு கொள்கைகளை மீறின, அதன் காரணமாகவே அகற்றப்பட்டுள்ளன என்று ட்விட்டர் நிறுவனம் கூறி உள்ளது.

நீக்கப்பட்ட கணக்குகள் பெரும்பாலும் சீன மொழியில்தான் இயக்கப்பட்டு வந்துள்ளன. இந்த கணக்குகளை ஆராய்ந்த ஸ்டான்ஃபோர்ட் இணைய ஆய்வகத்தின் ஆராய்ச்சி மேலாளர் ரெனீ டிரெஸ்டா, கொரோனா வைரஸ் பற்றி பதிவிடப்பட்டுள்ள கணக்குகள் பெரும்பாலும் கடந்த ஜனவரிக்கு பின்னர் தொடங்கப்பட்டவை என்று கூறினார்.

மேலும் சீனா மட்டுமின்றி ரஷியா மற்றும் துருக்கியுடன் பிணைக்கப்பட்ட கணக்குகளையும் நீக்கி உள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவிக்கிறது. ரஷிய கணக்குகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவை ஆளும் ஐக்கிய ரஷிய கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டவை என தெரிய வந்துள்ளது.
Tags:    

Similar News