செய்திகள்
வைகோ

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தை தடுத்து நிறுத்துவோம்- வைகோ

Published On 2021-01-13 10:33 GMT   |   Update On 2021-01-13 10:33 GMT
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தை தடுத்து நிறுத்துவோம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சென்னை:

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சென்னைக்கு அருகில் உள்ள காட்டுப்பள்ளியில், லி-ஜி நிறுவனத்திற்குச் சொந்தமான சிறிய துறைமுகம் 2012ம் ஆண்டில் இருந்து இயங்கி வந்தது. 2018ம் ஆண்டு இந்தத் துறைமுகத்தின் 97% பங்குகளை, குஜராத் அதானி குழுமம் ரூ.1950 கோடிகள் கொடுத்து வாங்கியுள்ளது.

330 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள சிறிய துறைமுகத்தை 6110 ஏக்கர் அளவிற்கு விரிவாக்கம் செய்வதற்காக, சுற்றுசூழல் துறையின் தடை இன்மைச் சான்று கேட்டு, அதானி குழுமம் விண்ணப்பித்துள்ளது.

இத்திட்டத்தின் காரணமாக, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்புகள் அதிகமாகவும், மீனவ மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படும் வாய்ப்புகளும் உள்ளன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும்.

காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம் நடைபெற்றால், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 35 லட்சம் மக்கள் வெள்ள அபாயத்தில் தள்ளப்படுவார்கள்.

பழவேற்காடு பகுதிகடல் அரிப்பால் கடுமையாகப் பாதிக்கப்படும். எனவே காட்டுப்பள்ளி துறைமுக விரிவாகத்தை உறுதியுடன் தடுத்து நிறுத்துவோம்.

இந்த திட்டத்திற்கான மக்கள் கருத்து கேட்கும் கூட்டம் ஜனவரி மாதம் 22-ந் தேதி நடைபெற இருக்கின்றது. திட்டத்தைப் பற்றி மக்கள் அறிந்துகொள்வதற்கு அதிக காலம் கொடுக்காததாலும், கொரோனா காலமாக இருப்பதாலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுவது ஆபத்தில் முடிந்துவிடும்.

அதனால் இந்த மக்கள் கருத்துக் கேட்கும் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும். கூட்டத்தை நடத்தினால், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்களுடன், நானும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்பேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News