செய்திகள்
கொரோனா தடுப்பூசி

நாடு முழுவதும் இதுவரை 15.82 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது- மத்திய சுகாதாரத் துறை தகவல்

Published On 2021-01-24 09:17 GMT   |   Update On 2021-01-24 09:17 GMT
நாடு முழுவதும் இதுவரை 15.82 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி:

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 கொரோனா தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.

கொரோனா தடுப்பூசி போடும் பணி நாடு முழுவதும் கடந்த 16-ந் தேதி தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி இதைத் தொடங்கி வைத்தார்.

தொடக்கத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் முன்களப் பணியாளர்கள் தயக்கம் காட்டி வந்தனர். இதனால் தடுப்பு மருந்தை செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. முதல் நாளில் 1.9 லட்சம் சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டார்கள். 3 லட்சம் பேர் வரை தொடக்க நாளில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

தற்போது தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 16 லட்சத்தை நெருங்கி உள்ளது.

இன்று மதியம் வரை நாடு முழுவதும் 15 லட்சத்து 82 ஆயிரத்து, 201 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நேற்று 1 லட்சத்து 91 ஆயிரத்து 609 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

Tags:    

Similar News