செய்திகள்
சென்னை பாரிமுனையில் ஆயுதபூஜை பொருட்களை வாங்க கூடிய பொதுமக்கள் கூட்டம்

ஆயுத பூஜையை முன்னிட்டு பழங்கள், பூஜை பொருட்கள் வாங்க மக்கள் ஆர்வம்

Published On 2020-10-24 05:11 GMT   |   Update On 2020-10-24 05:11 GMT
ஆயுத பூஜையை முன்னிட்டு பழங்கள், பூஜை பொருட்கள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனாலும் எதிர்பார்த்த விற்பனை நடக்குமா? என வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
சென்னை:

ஒவ்வொரு ஆண்டும் ஆயுத பூஜையை முன்னிட்டு பழங்கள், பூஜை பொருட்கள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டுவது வழக்கம். சென்னையை பொறுத்தவரையில் ஆயுத பூஜைக்கு ஓரிரு நாட்கள் முன்பாக கோயம்பேடு உள்பட சந்தைகளிலும், கடை வீதிகளிலும் மக்கள் ஆர்வமாக கூடி தேவையான பழ வகைகள் மற்றும் பூஜைக்குரிய பொருட்களை வாங்குவார்கள்.

இந்த முறை கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோயம்பேட்டில் செயல்பட்டு வந்த பழ சந்தை மாதவரம் பஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டு இருக்கிறது. தற்போது ஆயுத பூஜையை முன்னிட்டு அதிக அளவில் வியாபாரிகள் மாதவரம் சந்தைக்கு வரத்தொடங்கி இருக்கிறார்கள். ஆனாலும் இந்த ஆண்டு எதிர்பார்த்த வியாபாரம் நடக்குமா? என தெரியவில்லை என்று சந்தை கமிஷன் வியாபாரிகள் கவலை தெரிவித்திருக்கிறார்கள்.

இதுகுறித்து பழ வியாபாரிகள் சங்க தலைவர் பழக்கடை கே.ஜெயராமன் கூறியதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் ஆயுத பூஜையை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு முன்பாகவே பழ வியாபாரம் களை கட்டத் தொடங்கும். இந்த ஆண்டு கொரோனா பிரச்சினை காரணமாக வியாபாரம் கடுமையாக பாதித்திருக்கிறது. மொத்த வியாபாரிகள் வாங்கும் அளவும் வெகுவாக குறைந்திருக்கிறது.

இதனால் பழங்களின் வரத்தும் ஓரளவு குறைக்கப்பட்டு இருக்கிறது. பழங்களின் விலையில் மாற்றம் இல்லாத சூழ்நிலையில் கூட இந்த ஆண்டு எதிர்பார்த்த வியாபாரம் நடக்குமா? என்பது கேள்விக்குறிதான். எனவே மீண்டும் கோயம்பேடு மார்க்கெட் வளாகம் முழுமையான அளவில் திறக்கப்பட்டு விற்பனை நடந்தால் மட்டுமே வியாபாரிகளின் வாழ்வாதாரம் மீட்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாதவரம் சந்தையில் விற்பனை செய்யப்பட்ட பழங்களின் விலை நிலவரம் வருமாறு (கிலோவில்):-

ஆப்பிள் (வாஷிங்டன்) ரூ.180 முதல் ரூ.220 வரை, ஆப்பிள் (இந்தியா) ரூ.100 முதல் ரூ.150 வரை, மாதுளை ரூ.110 முதல் ரூ.160 வரை, சாத்துக்குடி ரூ.50 முதல் ரூ.70 வரை, ஆரஞ்சு ரூ.40 முதல் ரூ.60 வரை, அன்னாசி (ஒன்று) ரூ.40 முதல் ரூ.60 வரை, கொய்யா ரூ.50 முதல் ரூ.60 வரை, சப்போட்டா ரூ.50 முதல் ரூ.60 வரை, திராட்சை (பன்னீர்) ரூ.80, திராட்சை (கருப்பு) ரூ.80, திராட்சை (சீட்லெஸ்) ரூ.100, வாழை (தார்) ரூ.250 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்பட்டன.

மேலும் வாழை மரங்கள், மாவிலை தோரணங்கள், கரும்பு கட்டுகள், வெள்ளை பூசனிகளும் மாதவரம் பழ சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளன.

இதே போன்று, சென்னை பாரிமுனை, பூக்கடை பஜாரிலும் ஆயுத பூஜையையொட்டி பழ வகைகள், வாழை கன்றுகள், மாவிலை தோரணங்கள், அவல், பொறி, கடலை மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.

பூக்கடை பத்ரியன் தெருவில் உள்ள பூக்கடைகளிலும் மக்கள் பூக்களை வாங்கிச் சென்றனர். அங்கு பூக்கள் விலை நிலவரம் வருமாறு (கிலோவில்):-

மல்லிகை ரூ.900, பிச்சி பூ ரூ.600, கேந்தி ரூ.30, சாமந்தி ரூ.50-100, அரளி பூ ரூ.300, பட்டன் ரோஜா ரூ.160-200, நாட்டு ரோஜா (100 எண்ணம்) ரூ.60 என விற்பனை செய்யப்பட்டன.
Tags:    

Similar News