தொழில்நுட்பம்

இன்ஸ்டாகிராம் ஷாப்பிங் ஆப் உருவாகி வருவதாக தகவல்

Published On 2018-09-06 06:54 GMT   |   Update On 2018-09-06 06:54 GMT
இன்ஸ்டாகிராம் நிறுவனம் புதிதாக ஷாப்பிங் ஆப் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. #instagram



இன்ஸ்டாகிராம் நிறுவனம் பிரத்யேகமாக ஷாப்பிங் செயலி ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய செயலி ஐ.ஜி. ஷாப்பிங் என அழைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. 

இன்ஸ்டாகிராம் நிறுவனம் பிரத்யேகமாக ஷாப்பிங் செயலி ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இன்ஸ்டா செயலியில் ஷாப்பிங் அம்சம் வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் புதிய செயலி சார்ந்த விவரங்கள் வெளியாகியுள்ளது.

உலகம் முழுக்க சுமார் 100 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வரும் இன்ஸ்டா செயலியில் ஷாப்பிங் மிகமுக்கிய அங்கமாக இருந்து வருகிறது. முன்னதாக செயலினுள் ஷாப்பிங் செய்ய ஏதுவான அம்சங்களை வழங்க முடிவு செய்யப்பட்டு, 2016-ம் ஆண்டு பணிகள் துவங்கப்பட்ட நிலையில், தற்சமயம் பிரத்யேக செயலியாக வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



பிரத்யேக செயலியில் பயனர்கள் பின்பற்றும் வியாபார மையங்களின் கணக்குகளில் இருந்து பொருட்களை தேடி, அவற்றை வாங்க இன்ஸ்டாகிராம் வழி செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்சமயம் இந்த செயலி சோதனை செய்யப்படும் நிலையில், இதன் வெளியீடு குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

சோதனை செய்யப்படுவதால் இன்ஸ்டாவின் ஷாப்பிங் செயலி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படலாம் அல்லது பொது அறிவிப்புக்கு முன் ரத்து செய்யப்படவும் அதிக வாய்ப்புகள் உள்ளன. எனினும் ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக கவனம் செலுத்த இன்ஸ்டாகிராம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இன்ஸ்டாவாசிகளை கவரும் நோக்கில் பல்வேறு வியாபார மையங்களும், இன்ஸ்டாவில் தங்களை விளம்பரப்படுத்திக்கொண்டு வருகின்றன. அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் ஏற்கனவே சுமார் 2.5 கோடிக்கும் அதிகமான வியாபாரிகள் தங்களது பொருட்களை விளம்பரப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News