செய்திகள்
குமாரசாமி

மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு யாரும் அவசியம் இல்லை: குமாரசாமி

Published On 2020-12-22 01:44 GMT   |   Update On 2020-12-22 01:44 GMT
ஜனதா தளம் (எஸ்) கட்சியை வேறு கட்சியுடன் இணைக்கும் திட்டம் இல்லை. அதற்கான கேள்விக்கே இடமில்லை என்று குமாரசாமி கூறினார்.
பெங்களூரு :

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் எனது தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அரசு கவிழும் என்று தெரிந்திருந்தும், நான் வெளிநாட்டுக்கு சென்றதாக ஒருவர் கூறியுள்ளார். நான் அந்த அரசை காப்பாற்ற என்ன செய்ய வேண்டியிருக்கும்?. நீங்கள் (ஜி.டி.தேவேகவுடா) இன்னும் வளரவும், பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெறவும் நான் ஆட்சியில் இருந்திருக்க வேண்டுமா?. கூட்டணி ஆட்சியை காப்பாற்ற வேண்டும் என்று நான் நினைத்திருந்தால், அது எனக்கு மிகப்பெரிய வேலையாக இருந்திருக்காது.

எனது ஆட்சி காலத்தில் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து கமிஷன் கேட்கவில்லை. பா.ஜனதாவை சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்து என்னால் ஆட்சியை காப்பாற்றி இருக்க முடியும். என்னை பற்றி அடிக்கடி பேச வேண்டாம். உங்களின் அரசியல் பலத்தை பெருக்கி கொள்ள உங்கள் வழியை பார்த்துக் கொள்ளுங்கள். நான் யாரையும் நிதி நெருக்கடிக்கு ஆளாக்கவில்லை. நான் தவறான வழியில் பணம் சம்பாதிக்கவில்லை.

என்னை பற்றி குறை கூறி பேசுவதை ஜி.டி.தேவேகவுடா நிறுத்திக்கொள்ள வேண்டும். எங்கள் கட்சியை விட்டு விலக நினைப்பவர்கள் தாராளமாக செல்லலாம். ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு யாரும் அவசியம் இல்லை. நான் யாருக்கும் அநீதி இழைக்கவில்லை. பாவம், நீங்கள் ஏதோ ஒரு இடத்தில் நன்றாக இருங்கள். ஆனால் என்னை பற்றி தேவையின்றி பேச வேண்டாம். எனது உண்மையான அரசியல் வருகிற 2023-ம் ஆண்டு தான் தொடங்கும்.

சிலருக்கு உண்மையிலேயே நோய் வந்திருந்தால் அதற்கு மருந்து கொடுக்கலாம். ஆனால் நோய் என்ற பெயரில் நாடகம் ஆடுவோருக்கு என்ன மருந்து கொடுப்பது?. சிலர் தங்களின் அரசியல் எதிர்காலம் கருதி கட்சியை விட்டு வெளியேறுகிறார்கள். அதை பற்றி நான் கவலைப்படவில்லை. அதற்கு எனது ஆட்சேபனை இல்லை. யார்-யார் கட்சியை விட்டு செல்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். அந்த நெருக்கடியை எதிர்கொள்ள நான் மன ரீதியாக தயாராகிவிட்டேன்.

சிலர் ஜனதா தளம் (எஸ்) கட்சியில் இருந்து கொண்டு வளருகிறார்கள். கடைசியில் வேறு கட்சிக்கு சென்று விடுகிறார்கள். இவர்களை நம்பி தான் எங்கள் கட்சி இருக்கிறதா?. தொண்டர்களின் பலத்தால் தான் எங்கள் கட்சி இருக்கிறது. துருவகெரே தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் வெற்றி பெற எஸ்.எம்.சீனிவாஸ் எம்.எல்.ஏ. தான் காரணம். ஆயினும் அவரை நான் மந்திரி ஆக்கினேன். அவருக்கு நிதி மற்றும் நீர்ப்பாசனத்துறை ஒதுக்கி இருக்க வேண்டும்.

ஆனால் அவருக்கு சிறிய நீர்ப்பாசனத்துறை தான் ஒதுக்கினேன். அதனால் அவருக்கு கோபம் வந்துவிட்டது போல் உள்ளது. எடியூரப்பா உண்மையிலேயே உழைத்து முதல்-மந்திரி பதவிக்கு வந்துள்ளார். கட்சியை கட்டமைப்பது எவ்வளவு கஷ்டம் என்பது அவருக்கு தெரியும். எங்கள் கட்சியின் கதவுகள் திறந்தே இருக்கின்றன. யார் வேண்டுமானாலும் வெளியே போகலாம். ஜனதா தளம் (எஸ்) கட்சியை வேறு கட்சியுடன் இணைக்கும் திட்டம் இல்லை. அதற்கான கேள்விக்கே இடமில்லை.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.
Tags:    

Similar News