செய்திகள்
சசிகலா

4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா

Published On 2021-01-27 05:29 GMT   |   Update On 2021-01-27 09:27 GMT
4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து சசிகலா இன்று விடுதலையானார்.
பெங்களூரு:

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனை பெற்ற சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

சசிகலாவின் தண்டனை காலம் முடிவடைந்து இன்று அவர் விடுவிக்கப்படுவார் என்று சிறைத்துறை ஏற்கனவே அறிவித்து இருந்தது.

இந்தநிலையில் கடந்த 20-ந்தேதி ஜெயிலில் இருந்த சசிகலாவுக்கு திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அவர் பெங்களூரில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. கடந்த ஒரு வாரமாக சசிகலா விக்டோரியா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்போது சசிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள் முற்றிலுமாக நீங்கியுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவரது ரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவு சீராக இருக்கிறது. ஆக்சிஜன் அளவு 98 சதவீதமாக உள்ளது. ஊன்றுகோல் உதவியுடன் அவர் நடக்கிறார்.

சசிகலா சிகிச்சைக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு அளிப்பதாக விக்டோரியா மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் சசிகலாவின் தண்டனை காலம் இன்று முடிந்தது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் அவரை அங்கிருந்தபடியே விடுதலை செய்ய சிறைத்துறை முடிவு எடுத்தது.

இதையடுத்து சசிகலாவை விடுதலை செய்வதற்கான பணிகள் தொடங்கின. நேற்று விடுமுறை தினம் என்பதால் நேற்று முன்தினம் சசிகலா விடுதலை தொடர்பான ஆவணங்களை சிறைத்துறை அதிகாரிகள் தயார் செய்தனர்.

இன்று காலை 9.20 மணிக்கு சிறைத்துறை அதிகாரிகள் ஜெயிலில் இருந்து, சசிகலா சிகிச்சை பெறும் விக்டோரியா அரசு மருத்துவ மனைக்கு புறப்பட்டனர். 10.30 மணிக்கு அவர்கள் மருத்துவமனையை அடைந்தனர்.

சசிகலாவிடம் கையெழுத்து பெறும் ஆவணங்கள், அவரிடம் வழங்க உள்ள சான்றிதழ் மற்றும் சசிகலாவின் உடைமைகளையும் சிறைத்துறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவர்கள் டாக்டர்களை சந்தித்து சசிகலாவை விடுதலை செய்வதற்கான ஆவணங்களை கொடுத்து கையெழுத்து வாங்க வேண்டும் என்றனர்.

இதையடுத்து சிறைத்துறை அதிகாரிகளை டாக்டர்கள் சசிகலா சிகிச்சை பெற்ற வார்டுக்கு அழைத்து சென்றனர். அவர் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்ததால் சிறைத்துறை அதிகாரிகள் கவச உடை அணிந்து அங்கு சென்றனர்.

சசிகலாவை விடுதலை செய்வதற்கான ஆவணங்களை அவரிடம் காண்பித்து அதில் கையெழுத்து பெற்றனர். பின்னர் காலை 10.40 மணிக்கு சசிகலா விடுதலை செய்யப்பட்டதற்கான உத்தரவை அவரிடம் கொடுத்தனர். சசிகலாவின் உடைமைகளையும் அவரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து சசிகலா தண்டனை முடிந்து விடுதலை செய்யப்பட்டார். சசிகலா விடுதலை செய்யப்பட்ட தகவலை சிறைத்துறை அதிகாரிகள் உள்துறையிடம் தெரிவித்தனர்.

சிறைத்துறை அதிகாரிகள் சசிகலாவை சந்திக்க சென்றபோது டி.டி.வி.தினகரன், வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியனும் ஆகியோரும் சென்று சசிகலாவை சந்தித்தனர்.

சசிகலாவுக்கு இதுவரை இரண்டு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. சிறைத்துறை போலீஸ் பாதுகாப்பும், பெங்களூரு போலீஸ் பாதுகாப்பும் அவருக்கு போடப்பட்டு இருந்தது. தற்போது அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு சிறைத்துறை போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இனி அவரது பாதுகாப்பை பெங்களூரு போலீசார் கவனித்துக்கொள்வார்கள்.

சசிகலா அரசியல் தலைவர் என்பதால் அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அவரது வக்கீல் வாசுகி ராஜராஜன், கர்நாடக அரசுக்கும், மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பான மனு மத்திய உள்துறை செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சசிகலாவுக்கு கடந்த 21-ந்தேதி நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாசிட்டிவ் என்று அறிக்கை வந்தது. அதன்பிறகு அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை எடுக்கவில்லை.

சசிகலா தற்போது தண்டனை முடிந்து விடுதலை ஆகிவிட்டதால் அவர் இனி சுதந்திரமாக எந்த மருத்துவமனையில் வேண்டுமானாலும் சிகிச்சை பெறலாம். அவர் விடுதலை செய்யப்பட்ட தகவல் விக்டோரியா மருத்துவமனை நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு 7 நாட்கள் மட்டுமே ஆவதால் மீண்டும் பரிசோதனை செய்து அதன் பிறகு அவர் வேறு ஏதாவது தனியார் மருத்துவமனையில் சேர்ந்து பெங்களூரிலேயே தங்கி சிகிச்சை பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக அவரது உறவினர்கள் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்கள்.

சசிகலா விடுதலை செய்யப்பட்டதையொட்டி உறவினர்களான வெங்கடேஷ், விவேக் ஆகியோர் இன்று பெங்களூரு விக்டோரியா மருத்துவமனைக்கு சென்றனர். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பெருமாள், பழனியப்பன், முருகன் ஆகியோரும் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

சசிகலாவில் வக்கீல்கள் ராஜா செந்தூர்பாண்டியன், முத்துக்குமார், செல்வகுமார் உள்ளிட்ட வக்கீல்கள் குழுவினரும் மருத்துவமனையிலேயே இருக்கிறார்கள்.

சசிகலா விடுதலை செய்யப்பட்டாலும் இன்னும் சில நாட்கள் அவர் பெங்களூரிலேயே தங்கி சிகிச்சை பெறுவார். பிப்ரவரி மாதம் முதல்வாரம் அவர் சென்னை திரும்ப முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. சசிகலாவுடன் தண்டனை பெற்ற இளவரசிக்கு பிப்ரவரி 5-ந் தேதி தண்டனை காலம் முடிகிறது.

இதையடுத்து அவர் விடுதலை செய்யப்படுவார். எனவே இளவரசியுடன் சேர்ந்து சசிகலா சென்னை திரும்புகிறார்.

சசிகலா விடுதலை செய்யப்பட்ட தகவலை அறிந்ததும் அ.ம.மு.க. தொண்டர்கள் கட்சி கொடியுடன் ஆஸ்பத்திரி வளாகத்தில் திரண்டனர். அவர்கள் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

சசிகலா ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெறுவதால், தான் விடுதலை செய்யப்பட்ட பிறகு தன்னை பார்க்க தொண்டர்கள் யாரும் பெங்களூரு வர வேண்டாம் என்று அவர் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

சசிகலா இன்று விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அதிக அளவில் பெங்களூரு செல்லலாம் என்று கருதப்படுவதால் ஆஸ்பத்திரியில் கூட்டம் சேருவதை தடுக்க ஓசூர் எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

Similar News