ஆன்மிகம்
திருப்பரங்குன்றம்

மணமக்களுக்காக காத்திருக்கும் திருப்பரங்குன்றம்

Published On 2020-07-28 03:59 GMT   |   Update On 2020-07-28 03:59 GMT
சுப்பிரமணிய சுவாமி கோவிலின் கருவறையில் சுப்பிரமணியசுவாமி அமர்ந்த நிலையில் தெய்வானையுடன் திருமணக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். ஆகவே திருப்பரங்குன்றத்தை “திருமணத்திருத்தலம்” என்றும் கூறுவார்கள்.
முருகப்பெருமான் குடிகொண்டு அருளாட்சி புரியும் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு திருப்பரங்குன்றம் ஆகும். இங்குள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலின் கருவறையில் சுப்பிரமணியசுவாமி அமர்ந்த நிலையில் தெய்வானையுடன் திருமணக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். ஆகவே திருப்பரங்குன்றத்தை “திருமணத்திருத்தலம்” என்றும் கூறுவார்கள்.

பக்தர்களில் பெரும்பாலானோர் இந்த தலத்தில் திருமணம் செய்ய விரும்புகிறார்கள். ஆகவே அவர்களுக்கு வசதியாக கோவில் வளாகத்திலேயே கோவில் நிர்வாகத்தின் கீழ் வள்ளி தேவஸ்தான திருமண மண்டபம் அமைந்து உள்ளது. இது தவிர திருப்பரங்குன்றம் நகர் வீதிகளில் நூற்றுக்கணக்கான தனியார் திருமண மண்டபங்களும் உள்ளன. அதில் முகூர்த்த நாட்களில் திருவிழா போன்று திருமணங்கள் நடைபெறும். அதற்காக குறைந்தது 3 மாதங்களுக்கு முன்பே முன் பதிவு செய்வார்கள். தென் மாவட்டத்திலேயே அதிக திருமண மண்டபங்கள் உள்ள திருப்பரங்குன்றத்தில் திருமணம் செய்ய பக்தர்கள் விரும்புவதால் முன்பதிவு செய்வதில் போட்டா, போட்டி நிலவும்.

திருமணத்திற்காக மண்டபத்தை முன்பதிவு செய்தாலும் கோவிலுக்குள் தான் திருமணங்கள் நடைபெறும். வளர்பிறை சுப முகூர்த்தமான ஒரே நாளில் கோவிலுக்குள் 100-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்துள்ளது. சாதாரண முகூர்த்த நாளில் கூட சராசரி 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்து வருகிறது. முகூர்த்த நாட்களில் கோவில் மற்றும் மண்டபங்கள் நிரம்பி வழியும். இந்த நாளில் வாகன போக்குவரத்து நெரிசல் சொல்லி மாளாது. இதில் திருமண முன்பதிவு மூலம் கோவிலுக்கு ஆண்டு தோறும் கணிசமான வருமானம் கிடைக்கிறது.

முகூர்த்த தினம்

இந்த நிலையில் உலகத்தையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொடிய கொரோனா வைரசால் கடந்த மார்ச் மாதம் 20-ந்தேதி முதல் கோவில் மூடப்பட்டது. இதனையடுத்து மார்ச் மாதத்தில் முகூர்த்த தினமான 22 , 30-ந் தேதிகளில் முன்பதிவு செய்யப்பட்ட போதிலும் கோவிலுக்குள் திருமணம் நடத்துவது தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் கோவில் திறக்கப்பட வில்லை. இதனால் ஏப்ரல் மாதத்தில் முகூர்த்த தினமான 9, 17, 20, 27, 29 மற்றும் மே மாதத்தில் 4, 6, 13, 18-ந் தேதிகளில் கோவிலில் திருமணங்கள் நடத்தப்படவில்லை.

இதற்கிடையில் ஊரடங்கில் அளிக்கப்பட்ட தளர்வு காரணமாக மே மாதங்களில் கோவில் முன்பு எளிமையாக திருமணம் நடந்தது. குறிப்பாக அந்த மாதத்தில் 24-ந் தேதி மற்றும் 27-ந் தேதியில் நடந்த திருமணத்திற்காக வாழைத்தோரணம் கூட கட்டவில்லை. கெட்டி மேளம் ஒலிக்க வில்லை. சம்பிரதாய சடங்குகள் இல்லாமல் மிகவும் அமைதியாக திருமணம் நடத்தப்பட்டது. அன்றைய 2 தினங்களில் மட்டும் சுமார் 25-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்தன. அதில் உறவினர்கள் யாரும் பங்கேற்கவில்லை. யாருக்கும் சாப்பாடும் போடவில்லை.

கனவுக்கு வேட்டு

ஊரடங்கு இருந்தாலும் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் திருமணம் செய்வேன் என்ற வேண்டுதலால் தான் அங்கு வந்து பலரும் திருமணம் செய்தனர். இந்த எளிமையான திருமணங்களால் ஒரு பக்கம் செலவு மிச்சம் என்றாலும், பெரும்பாலானோர் அதனை விரும்புவதில்லை. பிள்ளைகளின் திருமணத்தை ஆடம்பரமாக நடத்த வேண்டும் என்பது பல பெற்றோர்களின் கனவாக உள்ளது. அந்த கனவுக்கு எல்லாம், கொரோனா வேட்டு வைத்து விட்டது.

அதே போல் அங்குள்ள மண்டபங்கள் அனைத்துக்கும் பூட்டு போடப்பட்டது. திருப்பரங்குன்றத்தில் நடைபெறும் திருமணங்களை நம்பி இருக்கும் மண்டப ஊழியர்கள், சமையல்காரர்கள், ஒலிபெருக்கி வைத்திருப்போர், கெட்டி மேளம் கொட்டுபவர்கள், திருமண போட்டோகிராபர்கள், பூ வியாபாரிகள் என அனைவரின் வாழ்க்கையும் வாடி வதங்கி போய் உள்ளது. அதுதவிர, முருகன் கோவிலை சுற்றியுள்ள கடைகள் அனைத்தும் வாடிக்கையாளர்கள் வரவின்றி உள்ளது.

கொரோனா ஒட்டு மொத்த திருப்பரங்குன்றத்தையும் முடக்கி போட்டு உள்ளது. மணமக்களின் வரவுக்காக அங்கு திருமண மண்டபங்கள் காத்து கிடக்கின்றன. இந்த நிலையில் ஆவணி மாத முகூர்த்த தினம் (ஆகஸ்டு) வருகிற 21, 23, 24, 28, 30, 31 ஆகிய 6 நாட்களில் வருகிறது. அந்த நாளில் திருமணம் செய்வதில் மணமக்கள் காத்திருக்கின்றனர். ஊரடங்கு அமலில் இருப்பதால் 50 பேர் மட்டுமே திருமணத்தில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலை நீட்டிக்கப்படுமா, தளர்வு தரப்பட்டு திருப்பரங்குன்றத்திற்கு மறுவாழ்வு கிடைக்குமா என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும்.
Tags:    

Similar News