செய்திகள்
அணைக்கரை கீழணைக்கு தண்ணீர்

அணைக்கரை கீழணைக்கு தண்ணீர் வந்தது- விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2020-06-22 06:47 GMT   |   Update On 2020-06-22 06:47 GMT
கல்லணையில் இருந்து இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் அணைக்கரை கீழணைக்கு வந்தது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மீன்சுருட்டி:

காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக மேட்டூர் அணை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி திறக்கப்படுவது வழக்கம். குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். தாமதமாக திறந்தால் குறுவை சாகுபடி குறைந்து சம்பா சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும்.

கடந்த ஆண்டு போதிய தண்ணீர் இல்லாததால் மேட்டூர் அணை கடந்த ஆண்டு ஜூன் 12-ந் தேதி திறக்கப்படவில்லை. தாமதமாக கடந்த ஆகஸ்டு மாதம் 13-ந் தேதி திறக்கப்பட்டது. இந்த நிலையில் மேட்டூர் அணையில் கடந்த 306 நாட்களாக 100 அடிக்கும் மேல் தண்ணீர் இருந்தது. இந்த ஆண்டு மேட்டூர் அணை கடந்த 12-ந் தேதி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் என முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதன்படி 8 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தண்ணீரை திறந்து வைத்தார்.

இந்த தண்ணீர் கடந்த 16-ந் தேதி கல்லணையை வந்தடைந்தது. அதை தொடர்ந்து கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய் மற்றும் கொள்ளிடத்திலும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி தண்ணீர் அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள அணைக்கரை கீழணைக்கு நேற்று காலை வந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இதுகுறித்து பொதுப்பணித்துறை அலுவலர்கள் கூறுகையில், அணைக்கரைக்கு மேட்டூரில் திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணை வழியாக கீழணைக்கு வந்தது. இந்த தண்ணீரானது வடவாறு வழியாக சென்னை குடிநீருக்கும், விவசாயத்திற்கும், வீராணம் ஏரிக்கும் வினாடிக்கு 500 கனஅடி வீதம் திறக்கப்படுகிறது என்றனர்.
Tags:    

Similar News