செய்திகள்
மசோதாவுக்கு எதிராக பேசிய சமாஜ்வாடி எம்பி விஷாம்பர் பிரசாத் நிஷாத்

டெல்லி கவர்னருக்கு கூடுதல் அதிகாரம்... மாநிலங்களவையிலும் நிறைவேறியது மசோதா

Published On 2021-03-24 17:11 GMT   |   Update On 2021-03-24 17:11 GMT
டெல்லி துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் என்சிடி மசோதா மீதான வாக்கெடுப்பின்போது காங்கிரஸ் கட்சி வெளிநடப்பு செய்தது.
புதுடெல்லி:

டெல்லியில் துணை நிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்க வகை செய்யும் தேசிய தலைநகர் டெல்லி (திருத்த) மசோதா-2021 (என்சிடி மசோதா) மக்களவையில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது. டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. டெல்லியில் எந்தவொரு  நடவடிக்கையையும் நிறைவேற்றும் முன்னர் துணைநிலை ஆளுநரின் கருத்தையும் டெல்லி அரசு கேட்கவேண்டும் என்பதை  இந்த மசோதா கட்டாயமாக்குகிறது.

இந்நிலையில், மாநிலங்களவையில் இந்த மசோதா மீது இன்று விவாதம் நடைபெற்து. காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, திமுக, பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. 

அவையில் ஏற்பட்ட கடும் அமளி, சில கட்சிகளின் வெளிநடப்புகளுக்கு மத்தியில் விவாதம் தொடர்ந்தது. விவாதத்திற்கு பிறகு மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது காங்கிரஸ் கட்சியும் வெளிநடப்பு செய்தது. அதன்பின்னர் நடந்த வாக்கெடுப்பில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து மாநிலங்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

மசோதா நிறைவேற்றப்பட்ட இந்த நாள் இந்திய ஜனநாயகத்தின் சோகமான நாள் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார். மேலும், மக்களின் அதிகாரத்தை மீட்டெடுக்கும் போராட்டம் தொடரும் என்றும், என்னென்ன தடைகள் வந்தாலும், எங்களின் நல்ல பணிகள் தொடரும் என்றும் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News