வழிபாடு
திருப்பதி

திருப்பதியில் இன்று ஆன்லைனில் வெளியிடப்பட்ட 3.36 லட்சம் தரிசன டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தது

Published On 2022-01-28 06:31 GMT   |   Update On 2022-01-28 06:31 GMT
திருப்பதியில் தரிசன டிக்கெட் வெளியிட்ட சுமார் 30 நிமிடத்தில் 3.36 லட்சம் தரிசன டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. இலவச தரிசன டிக்கெட்டுகள் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.
திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கான பிப்ரவரி மாதத்திற்கான ரூ.300 கட்டண தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டது.

ஒரு நாளைக்கு 12 ஆயிரம் டிக்கெட்டுகள் என 28 நாட்களுக்கு 3.36 லட்சம் தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டன. லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் தரிசன டிக்கெட்டுகளை பதிவு செய்வதற்காக தேவஸ்தான இணையதளத்தை பயன்படுத்தினர்.

இதனால் இணையதள சேவையை பயன்படுத்த முடியாமல் பக்தர்கள் தவித்தனர். பெரும்பாலானோர் தனியார் இன்டர்நெட் மையங்களில் தரிசனம் டிக்கெட்டுகளை பதிவு செய்தனர்.

தரிசன டிக்கெட் வெளியிடப்பட்ட நேரத்தில் இருந்து சுமார் 30 நிமிடத்தில் 3.36 லட்சம் தரிசன டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. டிக்கெட் கிடைக்காத பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இலவச தரிசன டிக்கெட்டுகள் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. ஒரு நாளைக்கு 10 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள் வீதம் 2.80 லட்சம் டிக்கெட்டுகள் வெளியிடப்படுகிறது.

Tags:    

Similar News