உலகம்
தலிபான்கள்

முடிவுக்கு வந்தது போர் நிறுத்தம்... பாகிஸ்தானில் மீண்டும் தாக்குதலுக்கு தயாராகும் தலிபான்கள்

Published On 2021-12-10 15:24 GMT   |   Update On 2021-12-10 15:24 GMT
பாகிஸ்தான் அரசு ஒப்பந்தத்தை மீறிவிட்டதாகவும் தங்கள் அமைப்பினரை கைது செய்யும் நடவடிக்கையில் பாகிஸ்தான் படையினர் ஈடுபடுவதாகவும் தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தெஹ்ரீக்-இ-தலிபான் பயங்கரவாத அமைப்பு பாகிஸ்தானின் தலிபான் என அழைக்கப்படுகிறது.  கடந்த 14 ஆண்டுகளாக பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் மற்றும் அந்நாட்டு பொதுமக்கள் மீது தெஹ்ரீக்-இ-தலிபான் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல்களில் ஈடுபட்டு வந்தனர்.  கடந்த 2014ம் ஆண்டு பெஷாவர் நகரில் உள்ள ராணுவ பள்ளியில் அந்த அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 150 பேர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானோர் குழந்தைகள்.

இந்நிலையில் தெஹ்ரீக்-இ-தலிபான் அமைப்புடன் இம்ரான்கான் அரசு கடந்த அக்டோபர் 25ம் தேதி ஆறு அம்ச ஒப்பந்தம் மேற்கொண்டது. 



இதன்படி கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி முதல் நவம்பர் 30ம் தேதி வரை இரு தரப்பும் போர் நிறுத்தம் செய்வது, சிறையில் உள்ள 102 தலிபான் படையினரை விடுதலை செய்வது உள்பட 6 அம்சங்கள் இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றன. இரு தரப்பினருக்கும் மத்தியஸ்தராக ஆப்கானிஸ்தானின் தலிபான் அமைப்பு செயல்பட்டு வந்தது. 

இந்நிலையில் பாகிஸ்தான் அரசு அந்த ஒப்பந்தத்தை மீறி விட்டதாகவும் தங்கள் அமைப்பினரை கைது செய்யும் நடவடிக்கையில் பாகிஸ்தான் படையினர் ஈடுபடுவதாகவும் தெஹ்ரீக்-இ-தலிபான்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், ஒரு மாத கால போர் நிறுத்த ஒப்பந்தத்தை கைவிடுவதாக அந்த அமைப்பின் தலைவர் முப்தி நூர் அறிவித்துள்ளார்.  

முன்னதாக அவர் வெளியிட்டுள்ள ஆடியோ செய்தியில், தனது போராளிகளை நள்ளிரவு 12 மணிக்கு மேல் தாக்குதல்களை மீண்டும் தொடங்குமாறு கேட்டுக் கொண்டார். மத்தியஸ்தர்களிடம் இருந்தோ அல்லது அரசாங்கத்திடம் இருந்தோ பதில் வராத நிலையில், தங்கள் போராளிகள் எங்கிருந்தாலும் தாக்குதல்களை மீண்டும் தொடங்க உரிமை உண்டு என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இதனை அடுத்து பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் மற்றும் அந்நாட்டு பொதுமக்கள் மீது மீண்டும் தெஹ்ரீக்-இ-தலிபான்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தாக்குதல் நடத்துவார்கள் என அஞ்சப்படுகிறது. பாகிஸ்தான் தாலிபான்களின் அறிவிப்பு, பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. மேலும், தலிபான்களுடன் அமைதி ஒப்பந்தம் செய்வதற்கான அரசின் முயற்சிகளுக்கும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News