வழிபாடு
கொடியேற்றத்தின் போது கொடிமரத்திற்கு கோவில் யானை அகிலா மரியாதை செலுத்திய போது எடுத்த படம்.

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி தேரோட்ட எட்டுத்திக்கு கொடியேற்றம்

Published On 2022-03-29 05:12 GMT   |   Update On 2022-03-29 05:12 GMT
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி தேரோட்டவிழாவின் 2-ம் நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு சுவாமி சூரியபிறை வாகனத்திலும், அம்மன் சந்திரபிறை வாகனத்திலும் வீதி உலா வருகின்றனர்.
பஞ்சபூதங்களில் நீர்தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில். இங்கு ஆண்டுதோறும் மாசி, பங்குனி மாதங்களில் மண்டல பிரமோற்சவ விழா 48 நாட்கள் கொண்டாடப்படும். இந்தாண்டுக்கான மண்டல பிரமோற்சவ விழா கடந்த மாதம் 11-ந் தேதி பெரிய கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இவ்விழா வருகிற ஏப்ரல் 18-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக பங்குனி தேரோட்டம் வருகிற 2-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி கோவில் 3-ம் பிரகாரத்தில் உள்ள எட்டுத்திக்கு கொடிமரங்களிலும் கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. முன்னதாக உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி, பிரியாவிடை ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு காலை 6.15 மணியளவில் கொடிமரம் அருகே வந்தனர். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

பின்னர் கோவில் 3-ம் பிரகாரத்தில் வலம் வந்தனர். அப்போது 3-ம் பிரகாரத்தில் உள்ள எட்டுத்திக்கு கொடிமரங்களிலும் கொடியேற்றம் நடைபெற்றது. கொடியேற்றத்தின் போது கோவில் யானை அகிலா கொடிமரங்களுக்கு மரியாதை செலுத்தியது. இரவு சோமாஸ்கந்தர், அம்மன் வெள்ளி ஏகசிம்மாசனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

விழாவின் 2-ம் நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு சுவாமி சூரியபிறை வாகனத்திலும், அம்மன் சந்திரபிறை வாகனத்திலும், நாளை (புதன்கிழமை) இரவு பூதவாகனம், காமதேனு வாகனத்திலும், 31-ந் தேதி கைலாச வாகனம், கிளி வாகனத்திலும், 1-ந்தேதி சுவாமி, அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி தெருவடைச்சானுடன் வீதி உலா வருகின்றனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் 2-ந்தேதி நடைபெறுகிறது. விழாவின் 7-ம் நாளான 3-ந்தேதி சுவாமி, அம்மன் வெள்ளிமஞ்சத்திலும், 4-ந்தேதி வெள்ளிகுதிரை வாகனத்திலும், பல்லக்கிலும், 5-ந் தேதி அதிகார நந்தி வாகனத்திலும், சேஷவாகனத்திலும், 6-ந்தேதி காலை நடராஜர் புறப்பாடு, நண்பகல் தீர்த்தவாரி நடைபெறுகிறது. மாலை வெண்பட்டு, வெண்மலர்கள் சாற்றி கொண்டு ஏகசிம்மாசனத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர். இதனை தொடர்ந்து சொக்கர் உற்சவம், மௌனோத்ஸவம், சண்டிகேஸ்வரர் உற்சவம் நடைபெறுகிறது.

ஏப்ரல் 16-ந் தேதி பஞ்சப்பிரகார விழா நடைபெறுகிறது. அதையொட்டி சுவாமி அம்மன் வேடத்திலும், அம்மன் சுவாமி வேடத்திலும் வெள்ளி மஞ்சத்தில் எழுந்தருளி 5-ம் பிரகாரத்தில் வீதி உலா வருகின்றனர். 17-ந்தேதி சாயாஅபிஷேகம், 18-ந் தேதி மண்டலாபிஷேகத்துடன் பிரமோற்சவ விழா நிறைவடைகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் மாரியப்பன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News