செய்திகள்
கோப்புப்படம்.

பிளஸ்2 தேர்வு - தனித்தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டுகோள்

Published On 2021-10-24 07:31 GMT   |   Update On 2021-10-24 07:31 GMT
அரசு தேர்வுத்துறை விதிமுறைப்படி பிளஸ் - 2 தனித்தேர்வு மதிப்பெண் சான்றிதழ்கள் அழிக்கப்பட உள்ளன.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட மேல்நிலைப்பள்ளி தேர்வு மையங்களில் மார்ச் 2014 முதல் செப்டம்பர் 2018 வரை நடத்தப்பட்ட பிளஸ் - 2 பொதுத்தேர்வுகளில் தேர்வு எழுதிய தனித்தேர்வர்களில் இதுவரை மதிப்பெண் சான்றிதழ் வாங்காதவர்கள் பெற்றுக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பூர் அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் மணிவண்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:-

மார்ச் 2014 முதல் செப்டம்பர் 2018 வரை நடத்தப்பட்ட பிளஸ் - 2 பொதுத்தேர்வில்  தேர்வு முடிவுகள் வெளியாகியதும், அம்மதிப்பெண் சான்றிதழ் தேர்வு மையங்கள் மூலம் தேர்வர்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டது. பலர் பெற்றுக்கொள்ளவில்லை. இவர்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்க அலுவலகத்தில் வினியோகிக்கப்படுகிறது.

விண்ணப்பங்களுடன் இணைத்து அனுப்பிய 10 - ம் வகுப்பு அசல் சான்றிதழ், பள்ளி மாற்று சான்றிதழ்கள் எங்களிடம் உள்ளது. அரசு தேர்வுத்துறை விதிமுறைப்படி  மேற்கண்ட ஆண்டுகளுக்கான பிளஸ் - 2 தனித்தேர்வு மதிப்பெண் சான்றிதழ்கள் அழிக்கப்பட உள்ளன.

எனவே பெறாதவர்கள் இச்செய்தி அறிவிப்பு வெளியிடப்படும் நாளில் இருந்து  3 மாதங்களுக்குள் இவ்வலுவலகத்தை அணுகி பெறலாம். தனித்தேர்வர்கள் கையெழுத்திட்ட கோரிக்கை கடிதத்துடன் ரூ. 45 மதிப்பு ஸ்டாம்ப் ஒட்டி சுய முகவரி எழுதப்பட்ட உறை, தேர்வு கூட அனுமதி சீட்டின் நகலை இவ்வலுவலகத்திற்கு அனுப்பியோ, நேரடியாகவோ பெறலாம். இதுவே இறுதி வாய்ப்பு. இவ்வாறு, அவர் கூறினார். 
Tags:    

Similar News