செய்திகள்
வேலூர் தாலுகா அலுவலகம் அருகே பறக்கும் படையினர் காரை சோதனை செய்தபோது எடுத்த படம்.

சட்டமன்ற தேர்தலையொட்டி பண பட்டுவாடாவை தடுக்க பறக்கும்படை, நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு

Published On 2021-02-28 18:03 GMT   |   Update On 2021-02-28 18:03 GMT
சட்டமன்ற தேர்தலையொட்டி வேலூர் மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி பணம் கொண்டு செல்வதை தடுக்க தலா 15 பறக்கும்படை, நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
வேலூர்:

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் 6-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது.

அதையடுத்து வேலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. பொது இடங்களில் வரையப்பட்டிருந்த கட்சி சின்னங்கள் அழிக்கப்பட்டது. மேலும் கட்சி தொடர்பான பேனர்கள் அகற்றப்பட்டன. அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டிருந்த முதல்-அமைச்சர் படங்கள் மறைக்கப்பட்டன.

தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம், நகை, சேலை மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க தொகுதி வாரியாக பறக்கும்படை, நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து செல்ல கூடாது. அவ்வாறு எடுத்து செல்லும் பணம் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. ஒரு சட்டமன்ற தொகுதிக்கு தலா 3 பறக்கும் படைகள் மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் என்று மொத்தம் 15 பறக்கும் படைகள், நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் தேர்தல் அலுவலர், சப்-இன்ஸ்பெக்டர், பெண் போலீஸ் ஆகிய 3 பேர் இருப்பார்கள். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை, மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை, இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை என்று 3 பிரிவுகளாக பறக்கும்படை, நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபடும்படி அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மாலை தேர்தல் அலுவலர்கள், பறக்குபடை, நிலை கண்காணிப்பு குழுவினருக்கு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதையடுத்து பறக்கும்படை, நிலைகண்காணிப்பு குழுவினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு சென்று பண பட்டுவாடாவை தடுக்க வாகன தணிக்கையை தொடங்கினர். வேலூர் சட்டமன்ற தொகுதி பறக்கும்படையினர் நேற்று மாலை 5 மணி முதல் வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே, கோட்டை சுற்றுச்சாலை, வேலப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகன சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் பணம், பரிசுப்பொருட்கள் உள்ளதா என்று தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டது.
Tags:    

Similar News