செய்திகள்
கைது

ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய என்ஜினீயர் கைது

Published On 2021-03-09 01:46 GMT   |   Update On 2021-03-09 01:46 GMT
திருச்சி திருவானைக்காவலில் நிறுவனத்துக்கு மின் இணைப்பு வழங்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி என்ஜினீயரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
திருச்சி:

திருச்சி திருவானைக்காவல் அய்யன்தெருவை சேர்ந்தவர் பழனியப்பன். இவர் தான் வேலை பார்க்கும் நிறுவனத்துக்கு மும்முனை மின் இணைப்பு கேட்டு ஸ்ரீரங்கம் மின்வாரிய அலுவலகத்தில் உள்ள திருவானைக்காவல் பிரிவு அலுவலகத்தில் ஆன்-லைன் மூலம் விண்ணப்பம் செய்து இருந்தார்.

அவருக்கு மின் இணைப்பு வழங்க மின்வாரிய உதவி என்ஜினீயர் ராஜேந்திரன் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத பழனியப்பன் இதுபற்றி திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து போலீசார் முதல் தவணையாக ரசாயன பொடி தடவிய ரூ.30 ஆயிரத்தை உதவி பொறியாளர் ராஜேந்திரனிடம் கொடுக்கும்படி பழனியப்பனிடம் அறிவுறுத்தினர்.

அதன்படி அவரும் உதவி பொறியாளர் ராஜேந்திரனிடம் லஞ்ச பணத்தை கொண்டு வருவதாக கூறினார். உடனே அவரை, நேற்று மதியம் பணத்துடன் திருவானைக்காவல் சிங்கப்பெருமாள் கோவில் அருகே வரும்படி ராஜேந்திரன் கூறி உள்ளார். இதையடுத்து அங்கு சென்ற பழனியப்பன் லஞ்சப்பணத்தை கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்து நின்று கண்காணித்து கொண்டு இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மின்வாரிய உதவி என்ஜினீயர் ராஜேந்திரனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும், அவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
Tags:    

Similar News