உள்ளூர் செய்திகள்
பொங்கல் விழாவை முன்னிட்டு போர் தேங்காய் உடைக்கும் போட்டி

ஆலங்குடி அருகே கோலாகலம் - பொங்கல் விழாவை முன்னிட்டு போர் தேங்காய் உடைக்கும் போட்டி

Published On 2022-01-16 10:53 GMT   |   Update On 2022-01-16 10:53 GMT
ஆலங்குடி அருகே உள்ள செரியலூர் இனாம் ஊராட்சியில் வேப்பங்குடி, மேற்பனைக்காடு, திருவாப்பாடி, கிராமங்களில் தேங்காய்களை உருட்டிக் மோதச்செய்யும் வித்தியாசமான போட்டி தேங்காய் சுடும் போட்டி நடத்தப்பட்டது.
ஆலங்குடி:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிராமங்களில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தேங்காய் உருட்டும் போர் தேங்காய் உடைக்கும் போட்டி நடத்தப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள செரியலூர் இனாம் ஊராட்சியில் வேப்பங்குடி, மேற்பனைக்காடு, திருவாப்பாடி, கிராமங்களில் தேங்காய்களை உருட்டிக் மோதச்செய்யும் வித்தியாசமான போட்டி தேங்காய் சுடும் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

அதாவது எதிர் எதிர் திசையில் இருவர் தங்கள் கைகளில் தேங்காய்களை வைத்து உருட்டி அதனை நேருக்கு நேராக மோத விடுவார்கள். அந்த மோதலில் உடையும் தேங்காயை மோதி உடைத்தவர் எடுத்துக் கொள்வார். இந்த மோதல் தேங்காய் ஒன்றை ரூ.300 முதல் ரூ.500 வரை விலை கொடுத்து வாங்கி வருகின்றனர்.

ஒரு தேங்காயை கொண்டு பல தேங்காய்களை உடைத்து அவற்றை கொண்டு செல்பவர்களும் உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக செரியலூர் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் களம் அமைத்து போட்டி தேங்காய்களை உருட்டி உடைக்கும் போட் டியும், வெற்றி பெறும் தேங்காய்க்கு பரிசும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த போட்டியில் புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் இருந்தும் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் தேங்காயுடன் வந்து பதிவு செய்து போட்டியில் கலந்து கெண்டனர். குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. 4 சுற்றுகளாக நடத்தப்பட்டு போட்டியின் இறுதியில் பல தேங்காய்களை உடைத்து வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.

இதுகுறித்து போட்டியாளர்கள் கூறுகையில், இது எங்களின் சந்தோ‌ஷத்துக்காக பொங்கல் தினத்தையொட்டி நடத்தப்படும் விளையாட்டாகும். இந்த போட்டியில் யாருக்கும் எந்த ஆபத்தும் இருக்காது.

தேங்காய்களுக்காக ஒவ்வொரு கிராமமாக அலைந்து இரண்டு மாதங்களுக்கு முன்பே தேங்காய்களை வாங்கி விட்டோம். கடந்த ஆண்டு ரூ.300, ரூ.400-க்கு கிடைத்த தேங்காய் தற்போது கிடைக்கவில்லை ஏனென்றால் கஜா புயலின் போது தென்னை மரங்கள் சாய்ந்ததால் இதற்காக ஒதுக்கப்பட்ட தென்னை மரங்களும் அழிந்து விட்டன என்றனர். 
Tags:    

Similar News