ஆன்மிகம்
திருவலிதாயம் திருத்தலம்

சகல விதமான தோஷங்களும் விலக வழிபட வேண்டிய கோவில்

Published On 2021-11-13 01:33 GMT   |   Update On 2021-11-13 08:06 GMT
இந்த கோவிலில் உள்ள குரு பகவானுக்கு, மஞ்சள் வஸ்திரம் சாத்தி, நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வந்தால் சகல விதமான தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து ஆவடி, அம்பத்தூர் வழியில் இருக்கிறது, பாடி என்ற ஊர். இங்குள்ள லூகாஸ் டி.வி.எஸ். பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, சுமார் 5 நிமிடம் நடந்தால், திருவலிதாயநாதர் திருக்கோவிலை அடையலாம். இந்த ஆலயம் குரு பகவானின் பரிகாரத் தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஏனெனில் இங்கு குரு பகவான் வந்து தங்கியிருந்து, சிவபெருமானை வழிபட்டு பேறு பெற்றுள்ளார். வியாழ பகவான் எனப்படும் குரு, தன்னுடைய சகோதரரின் மனைவி மேனகையின் சாபத்தால் பெரும் பாதிப்பை சந்தித்தார். அதில் இருந்து விடுபட வழி தெரியாமல் தவித்தவர், சிவபெருமானை நினைத்து வழிபட்டார்.

இதையடுத்து குரு பகவானின் முன்பாக தோன்றிய சிவபெருமான், “நீ.. திருவலிதாயம் திருத்தலம் சென்று என்னை நினைத்து தவம் செய்து வா.. உனக்கான பலன் கிடைக்கும்” என்றார்.

அதன்படியே இத்திருத்தலம் வந்த குரு பகவான், இங்கேயே நெடுங்காலம் தங்கியிருந்து சிவனை நினைத்து தவம் செய்து, தன்னுடைய சாபம் நீங்கப்பெற்றார். குரு பகவான், சிவ பூஜை செய்து வழிபட்ட திருத்தலம் என்பதால், இது குரு பரிகாரத் தலமாக விளங்குகிறது.

இந்த ஆலயத்தில் குரு பகவானுக்கு மட்டும் தனிச் சன்னிதி அமைந்திருக்கிறது.

இங்குள்ள குரு பகவானுக்கு, மஞ்சள் வஸ்திரம் சாத்தி, முல்லைப் பூவைக் கொண்டு அர்ச்சனை செய்து, நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வந்தால் சகல விதமான தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. இந்தத் திருத்தலத்தில் அருளும் குரு பகவானுக்கு, வியாழக்கிழமை அன்று காலை மற்றும் மாலை வேளைகளிலும், குருப்பெயர்ச்சி காலத்தின் போதும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படும். இதில் கலந்து கொண்டு குரு பகவானை வணங்கினால், தோஷங்கள் அனைத்தும் நீங்கி, நற்பலன்களை அடையலாம்.
Tags:    

Similar News