செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

அனைவரது வாழ்விலும் அன்பும் அமைதியும் நிலவட்டும்- எடப்பாடி பழனிசாமி பொங்கல் வாழ்த்து

Published On 2021-01-13 07:07 GMT   |   Update On 2021-01-13 07:07 GMT
தைப் பொங்கல் திருநாளில் மக்கள் அனைவரது வாழ்விலும் அன்பும் அமைதியும் நிலவட்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடும் எனது அன்பிற்குரிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

உழவுத் தொழிலை போற்றும் தைப்பொங்கல் திருநாளில், மக்கள் புத்தாடை அணிந்து, இல்லங்களில் வண்ணக் கோலங்களிட்டு கரும்பு, மஞ்சள், இஞ்சி, காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை படையலிட்டு, புதுப்பானையில் புது அரிசியிட்டு, அது பொங்கும்போது, ‘பொங்கலோ, பொங்கல்’ என்று உற்சாகமாக குரல் எழுப்பி, இறைவனை வணங்கி, பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்வார்கள்.

''உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என்ற மகாகவி பாரதியாரின் பாடலுக்கேற்ப, சிறப்புமிக்க வேளாண் தொழிலை மேம்படுத்திடவும், வேளாண் பெருமக்களின் நல்வாழ்விற்காகவும், அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலனைக் காத்திட தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டம், 2020 இயற்றியது.

வெள்ளம், வறட்சி, புயல் மற்றும் பூச்சி நோய் போன்ற பல்வேறு இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் 9,141 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை பெற்றுத் தந்தது, பண்ணை அளவில் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தி அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்குடன் ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம், அமெரிக்கன் படைப்புழு தாக்குதலிருந்து மக்காச்சோளப் பயிரினை காக்கும் மேலாண்மை திட்டம்.

விவசாயிகளுக்கு தரமான விதைகளை உரிய காலத்தில் விநியோகம் செய்வதற்காக, தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு முகமை, முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம், தமிழ்நாட்டில் விளையும் பழங்கள், காய்கறிகள் ஆகிய விளைபொருட்களில் அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்பினை குறைத்து, மதிப்புக்கூட்டி விவசாயிகள் அதிக வருமானம் பெறும் வகையில் விநியோகத் தொடர் மேலாண்மைத் திட்டம்.

நுண்ணீர்ப் பாசனத்திற்கு சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியமும் வழங்கும் திட்டம், நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை திட்டம், சிறு குறு விவசாயிகளை ஊக்குவித்து கூட்டாக சாகுபடிப்பணியினை மேற்கொள்ள ‘கூட்டுபண்ணைய திட்டம்’, அதிகரித்து வரும் பண்ணைப் பணியாளர்களின் பற்றாக்குறையினை கருத்தில் கொண்டு வேளாண் இயந்திர மயமாக்குதல் திட்டம்.

தகவல் தொழில்நுட்பம் மூலம் விவசாய பெருமக் களுக்கு வேளாண் தகவல்களை கொண்டு சேர்க்கும் ‘உழவன்’ கைபேசி செயலி, விவசாயிகளுக்கு மண் வள அட்டைகள் வழங்கியது, வேளாண் விளைபொருட்கள் வீணாவதைக் குறைப்பதற்கும், பண்ணைப் பொருட்களை மதிப்புக் கூட்டி, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் ‘தமிழ்நாடு உணவு பதப்படுத்தும் கொள்கை 2018’ வெளியிட்டது, ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்களை கட்டியது போன்ற பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

அம்மாவின் அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக, உணவு தானியங்கள், பயறு வகைகள், சிறுதானியங்கள் மற்றும் எண்ணெய்வித்துக்கள் போன்ற இனங்களில் தமிழ்நாடு அதிக உற்பத்தி செய்து சாதனை படைத்ததற்காக, மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு 5 முறை கிருஷி கர்மான் விருதினை வழங்கி கவுரவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் மற்றும் புயல், கனமழையால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பான முறையில் கொண்டாடிட அம்மாவின் அரசு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாய் ரொக்கத்துடன், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய் மற்றும் ஒரு முழு நீள கரும்பு ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கி சிறப்பித்துள்ளது.

இந்த இனிய தைப் பொங்கல் திருநாளில், உழவு செழிக்கட்டும். உழவர்கள் மகிழட்டும். மக்கள் அனைவரின் வாழ்விலும் அன்பும் அமைதியும் நிலவட்டும். நாட்டில் நலமும் வளமும் பெருகட்டும் என்று வாழ்த்தி, மீண்டும் ஒருமுறை எனது பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News