ஆன்மிகம்
மயிலாடுதுறை காவிரிக்கரையில் ஐப்பசி மாத துலா உற்சவ தீர்த்தவாரி

மயிலாடுதுறை காவிரிக்கரையில் ஐப்பசி மாத துலா உற்சவ தீர்த்தவாரி

Published On 2020-10-19 04:27 GMT   |   Update On 2020-10-19 04:27 GMT
இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் வகையில் சாமி புறப்பாட்டிற்கு அரசு தடைவிதித்துள்ளதால் காசிவிஸ்வநாதர் கோவில்களில் இருந்து அஸ்திரதேவர்கள் மட்டும் காவிரிக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
மயிலாடுதுறையில் துலா உற்சவ முதல்நாள் தீர்த்தவாரி அஸ்திரதேவர் மட்டுமே காவிரிக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. கங்கை முதலான புன்னிய நதிகள் ஐப்பசி மாதத்தில் மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் புனித நீராடி தங்கள் பாவங்களை போக்கிகொண்டதாக பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

இதனை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களும் மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் சாமி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கும். இதில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மாயூரநாதர், அய்யாறப்பர், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வதானேஸ்வரர், காசிவிஸ்வநாதர் ஆகிய சாமிகள் காவிரியின் இருகரைகளிலும் எழுந்தருளி தீர்த்தவாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கும்.

இதில் முதல்நாள் தீர்த்தவாரி, அமாவாசை தீர்த்தவாரி மற்றும் கடைசி 10 நாள் உற்சவத்தில் நான்கு கோவில்களில் இருந்து சாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகளோடு காவிரிக்கரைக்கு எழுந்தருளி தீர்த்தம்கொடுப்பது வழக்கம். பிரசித்திபெற்ற துலா உற்சவம் நேற்று தொடங்கியது.

இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் வகையில் சாமி புறப்பாட்டிற்கு அரசு தடைவிதித்துள்ளதால் முதல்நாள் தீர்த்தவாரி உற்சவத்திற்கு மாயூரநாதர்கோவில், வதானேஸ்வரர்கோவில், அய்யாறப்பர்கோவில், காசிவிஸ்வநாதர் கோவில்களில் இருந்து அஸ்திரதேவர்கள் மட்டும் காவிரிக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி பகல் 1.30 மணியளவில் நடந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News