செய்திகள்
ஜி.கே.வாசன்

நிர்பயா வழக்கில் நீதிக்கு கிடைத்த வெற்றி- ஜி.கே.வாசன்

Published On 2020-03-20 08:11 GMT   |   Update On 2020-03-20 08:11 GMT
இன்றைய முடிவின் மூலம் நிர்பயா வழக்கில் நீதியை நிலைநாட்டிய நீதிமன்றத்துக்கும், நீதியை நிலைநாட்ட உதவிக்கரமாக செயல்பட்ட மத்திய அரசுக்கும் ஜி.கே.வாசன் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாடு முழுவதும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிர்பயா வழக்கில் இன்று நீதி நிலைநாட்டப்பட்டுவிட்டது வரவேற்புக்குரியது. நிர்பயா வழக்கில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு கொலைக்கு காரணமான கொடியவர்களுக்கு காலம் தாழ்ந்து தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தாலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு நீதி கிடைத்திருக்கிறது.

இந்த வழக்கில் தூக்கு தண்டனை குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் முதல் முறையாக தூக்கு தண்டனைக்கான தேதி குறிக்கப்பட்ட அந்த தேதியிலேயே அந்த காட்டு மிராண்டித்தனமான கொலைக்குற்றவாளிகளுக்கு தண்டனையை நிறைவேற்றியிருக்க வேண்டும். தண்டனை தள்ளிப்போனதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறது. என்றாலும் இந்த மிருகத்தனமான செயலை செய்தவர்களுக்கு காலம் தாழ்த்தாமல் தண்டனைக்கிடைத்திருக்க வேண்டும்.

2013 ஜனவரியில் தொடங்கிய வழக்கின் சட்டப்போராட்டம் இன்று முடிவுக்கு வந்துள்ளது.

இன்றைய முடிவின் மூலம் நிர்பயா வழக்கில் நீதியை நிலைநாட்டிய நீதிமன்றத்துக்கும், நீதியை நிலைநாட்ட உதவிக்கரமாக செயல்பட்ட மத்திய அரசுக்கும் த.மா.கா சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைய நாள் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்து கொள்ளும் நாளாக அமையும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

எனவே 7 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொடூரச் செயலுக்கு தற்போது நீதி கிடைத்திருந்தாலும் அந்த வெற்றி நீதிக்கு கிடைத்திருக்கிற வெற்றியாகும். எனவே இனிவரும் காலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் மட்டுமல்ல, பொது மக்களும் உதவிக்கரமாக செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News