செய்திகள்
தமிழிசை சவுந்தரராஜன்

நாம் அனைவரும் கைகோர்த்து கொரோனா தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக மாற்ற வேண்டும்- தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தல்

Published On 2021-01-10 01:40 GMT   |   Update On 2021-01-10 01:40 GMT
இந்திய அறிவியல் சமூகத்தின் முயற்சிகளை அவதூறு செய்ய வேண்டாம் என்றும், நாம் அனைவரும் கைகோர்த்து கொரோனா தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக மாற்ற வேண்டும் என்றும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது நம் நாட்டின் வளர்ச்சியில் ஒரு வரலாற்று மைல்கல். அதே நேரத்தில் துரதிர்ஷ்டவசமாக மக்களில் சிறு பிரிவினர் சொந்த நலன்களுக்காக தடுப்பூசி திட்டம் குறித்து சந்தேகங்களையும், சர்ச்சைகளையும் உருவாக்கியது இந்திய அறிவியல் சமூகத்தின் முயற்சிகளை அவதூறு செய்வதாகும்.

ஒரு மருத்துவ நிபுணராகவும், கவர்னராகவும் அதை எதிர்கொள்ளும் போது மன உளைச்சலை தருகிறது. விமர்சகர்கள் தங்களின் விமர்சனங்கள் விஞ்ஞான சமூகத்தின் மிகப்பெரிய முயற்சிகளை உதாசீனப்படுத்தும் என்பதை உணர வேண்டும். ஆதாரமற்ற சர்ச்சை பொதுமக்களிடையே தடுப்பூசி பற்றிய தேவையற்ற பீதியை உருவாக்கிவிடும்.

130 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியா தடுப்பூசி செயல்பாட்டில் பின்தங்கி விடக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

பாரத் பயோடெக் தடுப்பூசி கோவேக்சின், இந்திய கவுன்சில் உடன் இணைந்து உருவாக்கப்பட்டது. பாரத் பயோடெக் தடுப்பூசிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. இந்தியா மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் மீது எழுப்பப்பட்ட சந்தேகங்கள் துரதிா்ஷ்டவசமானது. எந்தவொரு வதந்தியும் மக்களிடையே தடுப்பூசி போட்டுக் கொள்வதை தடுத்து விடக்கூடாது.

முன்பு போலியோ சொட்டு மருந்து குறித்து தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டதால் சிலர் தடுப்பூசி போடுவதை தவிர்த்தனர். எனது மருத்துவ பயிற்சி நாட்களின்போது, போலியோ சொட்டு மருந்து குறித்து நடிகர் ரஜினிகாந்த் போன்றவர்கள் விளம்பரம் செய்ததால் மக்கள் மருத்துவமனைக்கு வந்து போலியோ சொட்டு மருந்துகளை விரும்பி கேட்பார்கள்.

எனவே தடுப்பூசி குறித்து மக்களிடையே விழிப்புணர்வு மிகவும் அவசியம். எல்லா சர்ச்சைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தில் பங்கேற்க மக்கள் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

பிரதமர் நரேந்திரமோடியால் அறிவிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி திட்டம் தொற்றுநோய்க்கு எதிரான நாம் போராட்டத்தில் அவசரகால பயன்பாட்டிற்கான, ஒப்புதல்கள், உண்மையான வளர்ச்சிக்கான அடிப்படையாகும். இந்த நேரத்தில் நாம் அனைவரும் கைகோர்த்து உலகின் மிகப்பெரிய சவாலான கொரோனா தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டும். பிரதமர் நரேந்திர மோடியால் எதிர்பார்க்கப்பட்ட சுயசார்பு கொண்ட இந்தியா இந்த இலக்கை அடைய உதவுவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News